Published : 18 Jan 2017 02:45 PM
Last Updated : 18 Jan 2017 02:45 PM

பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டும் முடிவை கைவிட கேரள முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும்: ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழக முதல்வர் உடனடியாக கேரள முதல்வரை நேரில் சந்தித்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் முடிவை கைவிட வலியுறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்னும் இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சிகள் மேற்கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், இந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாகத் திகழும் பவானி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை தடுக்கும் கேரள அரசின் இந்த முயற்சி தமிழக மக்களையும், விவசாயிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கெனவே 2002-ம் வருடம் இதே போன்றதொரு முயற்சியை கேரள அரசு மேற்கொண்டது. ஆனால் அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் அன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு எடுத்த சீரிய நடவடிக்கையின் காரணமாக கேரள அரசின் அணை கட்டும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

15 வருடங்கள் அமைதி காத்து விட்டு இப்போது திடீரென்று மீண்டும் அட்டப்பாடி பள்ளத்தாக்குப் பகுதியில் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இரு இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுவதற்காக மணல், ஜல்லிகளை கொட்டி முதற்கட்ட பணிகளில் கேரள அரசு ஈடுபட்டிருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது.

இதுவரை அதிமுக அரசின் சார்பில் கேரள அரசின் முயற்சிகளை கண்டிக்கவும் இல்லை. கேரள அரசுடன் உடனடியாக பேசி இப்பணிகளை தடுத்து நிறுத்த முன் வரவும் இல்லை. அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்கள். தமிழகத்திற்கு பவானி ஆற்றுத் தண்ணீரின் முக்கியத்துவம் கருதி திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணை தலைவர் பழனிச்சாமி அக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையில் இப்போது துவங்கப்பட்டுள்ள 2 தடுப்பணைகள் தவிர மேலும் நான்கு புதிய தடுப்பணைகளை பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்படி ஆறு தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களின் விவசாயம் மோசமாக பாதிக்கப்படும். பவானி சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அறவே குறைந்து போகும் ஆபத்தும் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற தருணத்தில் கேரள அரசும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்க முயற்சிப்பது கடும் வேதனைக்குரியது மட்டுமல்ல மிகுந்த கவலையளிப்பதாகவும் இருக்கிறது.

ஆகவே இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை பாதிக்கும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டும் எந்த ஒரு முயற்சியையும் கேரள அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்சினைகளையும், விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களையும் விளக்கிக் கூறி, கேரள அரசின் ஆறு தடுப்பணைகள் கட்டும் முடிவை கைவிட வலியுறுத்த வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x