Published : 07 Dec 2016 12:19 PM
Last Updated : 07 Dec 2016 12:19 PM

பல்துறை வித்தகர் சோ- நாடகம் முதல் அரசியல் அரங்கு வரை

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

பல்துறை வித்தகரான சோ கடந்து வந்த பாதை

* சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.

* இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

வழக்கறிஞராக சோ

* சோ ராமசாமியின் தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ரூபூதம் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள். எனவே இயற்கையாகவே சோ அதில் ஈர்க்கப்பட்டு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்

நாடக உலகில்...

* 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக 'கல்யாணி' என்ற நாடகத்தில் நடித்தார்.

* 'தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் 'சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. அதன்பிறகு முழு நேர நாடகக் கலைஞராக பாதை மாற்றிக் கொண்டார்.

* சோவின் நாடகங்களில் அரசியல் நையாண்டியும், சமூக விமர்சனமும் கலந்திருக்கும். 1960-களில் அவரது சம்பவாமி யுகே யுகே என்கிற நாடகத்தை தணிக்கை செய்ய தமிழகத்தின் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான பக்தவத்சலம் முயற்சி செய்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.

* சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.

* 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது 'இந்து மகா சமுத்திரம்' நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.

திரைப்பட உலகில்...

* திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

* பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 'யாருக் கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

* சோ எழுதிய பல நாடகங்கள், மேடையைத் தாண்டி திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் நன்கு கற்றவர். அவை குறித்து விரிவாக எழுதியும் உள்ளார்.

* சோவின் முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படமாக உருவாவதைத் தடுக்க அப்போதைய திமுக அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது.

* 'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் கூறுவார்.

பத்திரிகை உலகில்...

* தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970-ம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார்.

* அவரது நையாண்டியும், துணிச்சலும் அவரது கட்டுரைகளிலும், கேலிச்சித்திரங்களிலும் பிரதிபலித்தது.

அரசியல் அரங்கில்...

* அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

* பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து ஒருவகையில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சோ எனக் கூறலாம்.

* வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்

* தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.

* சோ தான் பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றிகள் குறித்து பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றே கூறுவார். அதனால் தான் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியபோது அதற்கு 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' எனப் பெயர் வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x