Published : 07 Dec 2016 10:46 AM
Last Updated : 07 Dec 2016 10:46 AM

பத்திரிகை உலகின் ஜாம்பவான் சோ: ரஜினி புகழஞ்சலி

பத்திரிகை உலகின் ஜாம்பவான் 'சோ' என்று நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி இன்று (புதன்கிழமை) உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சோவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. சோவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

சோ உடலுக்கு ரஜினி அஞ்சலி செலுத்தினார்.

அதற்குப் பிறகு சோ குறித்து ரஜினி பேசுகையில், ''1978-ல் இருந்து சோவை நன்றாகத் தெரியும். நான் சென்னையில் இருந்தால் வாரத்துக்கு ஒரு முறையாவது சோவைச் சந்திப்பேன். நிறைய பேசுவோம்.

பத்திரிகை உலகின் ஜாம்பவான் சோ. அவர் பொய் சொல்லி நான் கேள்விப்பட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை. சோ யாருக்காகவும் பயந்தோ அல்லது தாட்சண்யத்துக்காகவோ பேசவும் மாட்டார். அஞ்சவும் மாட்டார்.

சோவின் நட்பு வட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, டெல்லி வரைக்கும் பரந்து கிடந்தது. மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், மோடி என பெரிய நட்புறவைக் கொண்டவர். சோவின் பேச்சுக்கும், சிந்தனைக்கும் மிகப் பெரிய மரியாதை உள்ளது.

சோ மிகப் பெரிய மனிதர். அவரது இழப்பு சாதாரணமானதல்ல. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்'' என்றார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x