Published : 08 Nov 2016 09:48 AM
Last Updated : 08 Nov 2016 09:48 AM

பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை: வைகைச்செல்வன் சிறப்புப் பேட்டி

பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறினார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளரு மான வைகைச்செல்வன் ‘தி இந்து’ வுக்கு அளித்தப் பேட்டி:

திருப்பரங்குன்றம் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும்?

முருகக் கடவுளின் ஊரில் திமுகவை வதம் செய்வது உறுதி. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் திமுகவைத் தோற்கடிப்போம்.

ஜெயலலிதா முழுமையாக குண மடைந்துவிட்டார் என்றால் அவரது போட்டோவை வெளியிடாதது ஏன்?

இந்த விஷயத்தில் திமுக அரசியல் செய்கிறது. முதல்வர் நன்றாக குணமடைந்து வருகிறார் என ஆளுநர், அப்போலோ மருத்துவக் குழு, மத்திய, மாநில அமைச்சர்கள் என பலரும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இதில் மறைக்கவோ, திகைக்கவோ ஏதும் இல்லை. முதல்வர் பெண் என்பதால் சிகிச்சையில் இருக்கும் போட்டோவை வெளியிடுமாறு கோருவது ஏற்கக்கூடியதல்ல.

அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக திமுக, பாமக போன்ற கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து?

முதல்வரின் துறைகள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப் பட்டுள்ளன. 2 முறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை, உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது ஆதார மில்லாத குற்றச்சாட்டு.

முதல்வர் ஜெயலலிதா பிரச்சார களத்தில் இல்லாததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?

‘அம்மா’ என்ற மந்திரச்சொல் தமிழக மக்களின் ஆழ்மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது. இதுவே 3 தொகுதிகளிலும் இமா லய வெற்றியைத் தந்துவிடும்.

3 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்து, அடுத்த பட்ஜெட்டை மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்வார் என்ற பேச்சு குறித்து?

ஆட்சி கனவில் மிதக்கும் மு.க.ஸ்டாலின், பதவி வெறிக்கு உள்ளான தன் கட்சி நிர்வாகிகளைத் தக்கவைக்க தடுமாறுகிறார். குளத்து மீன்களின் பசி தீர்க்க பொரியை போடுவதுபோல், திமுகவினருக்கு பதவி ஆசை என்ற பொரியை வீசுகிறார் மு.க.ஸ்டாலின்.

பணம் கொடுக்க அதிமுக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வரும் தகவல் குறித்து?

திருமங்கலம் பார்முலாவை உருவாக்கியதே திமுகதான். பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை.

ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதற வாப்பில்லாததால் திமுகவின் வெற்றிக்கும் வாய்ப்பு உள்ளதே?

திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் நலக் கூட்டணி மீது அக்கட்சி தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லை. தேமுதிக எங்கே இருக்கிறது என தேட வேண்டிய நிலை.

சின்னத்தைக்கூட பெற முடியாத நிலையில் பாமக. மற்ற உதிரிக் கட்சிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை. இதனால் எங்களுக்கு போட்டியே இல்லாத நிலையில், அமோகமான வெற்றியைப் பெறுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x