Published : 30 Dec 2016 11:10 AM
Last Updated : 30 Dec 2016 11:10 AM

பணப்பிரச்சினை 50 நாளில் சரியாகும் என பிரதமர் சொல்லவே இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

பணப்பிரச்சினை 50 நாள்களில் சரியாகும் என பிரதமர் சொல்லவே இல்லை. உதாரணத்துக்காக அவர் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுகவை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவரது பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

அதிமுகவுக்கு சட்டப் பேரவையில் பெரும்பான்மை உள்ளது. யார் முதல்வராக வர வேண்டும் என்பதை அதிமுகவினர்தான் முடிவு செய்ய வேண்டும். புதிய தலைமையால் அதிமுக உடன் கட்சிகள் கூட்டணி அமைப்பார்களா என்பதை இப்போது சொல்ல முடியாது. பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு முதல் நிலை கட்சியாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.

பணப் பிரச்சினை 50 நாள்களில் சரியாகும் என பிரதமர் எப்போதும் உறுதியாக கூறவில்லை.

உதாரணத்துக்கு கூறுவதை தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்கின்றனர். விரைவில் பிரச்சினைகள் தீரும். இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்தில் நரேந்திர மோடி செயல்படுகிறார். வரும் புத்தாண்டு இந்தியாவின் ஆண்டாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x