Last Updated : 30 Dec, 2016 11:00 AM

 

Published : 30 Dec 2016 11:00 AM
Last Updated : 30 Dec 2016 11:00 AM

நொய்யல் இன்று 17: முன்மாதிரியாகத் திகழும் சூலூர், கண்ணம்பாளையம் குளங்கள்!

மக்கள் முயற்சியால் பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகள்

நொய்யலை மேல்தொகுதி, கீழ்தொகுதி என்று 2 நிலைகளாகப் பிரித்துள்ளனர் இது ஆங்கிலேயேர்கால ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்தொகுதி நொய்யலில் சித்திரைச்சாவடியிலிருந்து 80.50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூர் மண்ணரை அணைக்கட்டு வரை புதர்மண்டி, மண்மேடாகி, சாக்கடை, சாய, சலவைக் கழிவுகளால் நிரம்பிக் காட்சியளிக்கிறது. அதற்கான மதகுகள், வாய்க்கால்கள், குளங்கள் நிலையும் அப்படித்தான். பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் காணாமலே போய்விட்டன.

கோவை நகரின் அருகேயுள்ள சூலூர் குளத்தின் இரட்டைக் குளங்கள் மட்டும் ஆண்டு முழுவதும் வற்றாமல், நீர் நிரம்பியுள்ளன. மின்பிடித் தொழிலும் நடக்கிறது. அதைவிட, இந்தக் குளங்களின் மூலம் 400 ஏக்கர் பாசன விவசாயமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

சூலூர் குளங்களின் முன்பும், பின்பும் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் சாய, சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி, பாழாகியுள்ள நிலையில், இவ்விரு நீர்நிலைகளை மட்டும் எப்படி இந்த ஊர்க்காரர்களால் காப்பாற்றி பாசனத்துக்குப் பயன்படுத்த முடிகிறது?

80 ஆண்டுகால வரலாறு

இதுகுறித்து சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், எழுத்தாளருமான சூ.ரா.தங்கவேலு கூறியது: இதற்கு 80 ஆண்டுகால வரலாறு உள்ளது. எனது அண்ணனும், சூலூரின் முன்னாள் தலைவருமான எஸ்.ஆர்.சுப்பிரமணியம், எங்கள் ஊருக்கு சிறுவாணிக் குடிநீர் கொண்டு வரவும், நொய்யல் மூலம் பாசனம் மேற்கொள்ளவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். 1932-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நொய்யலில் சித்திரைச்சாவடிக்கு (முதல் அணை) கிழக்கே மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற நாட்களில் அங்கு வரும் நீர், வாய்க்கால் மூலம் வேடப்பட்டியில் இருந்த தொழிலதிபரின் எஸ்டேட்டுக்கே சென்றது. அப்படி ஒரு நிலை ஆணையை (Standing order) அந்தப் பிரமுகர் ஆங்கில அதிகாரியிடம் வாங்கி வைத்திருந்தார்.

சித்திரைச்சாவடி வாய்க்காலைத் திறந்தால் கோவை நகரில் உள்ள 10 குளங்களுக்கு தண்ணீர் விடும். அப்படி செய்தால், அந்த பிரமுகர் பெரிய அளவில் பிரச்சினை செய்வார். கோவையில் மலைச்சாமி ஆட்சியராக இருந்தபோது, விவசாயிகள் போராட்டம் பெரிதானது. இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் 2 முறை வாய்க்காலைத் திறந்து விட்டனர். எனினும், பழைய உத்தரவைவைத்து, மீண்டும் வாய்க்காலை அடைத்தனர்.

1978-ல் கடும் வறட்சி நிலவியது. தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக ஊர் மக்கள் கூடி ஆலோசித்தோம். அப்போது, ஆற்றில் வரும் தண்ணீரை குளங்களில் தேக்கும் வகையில், மண்மேடாகிக் கிடக்கும் அணையை உயர்த்தவும், வாய்க்கால் நீர் மூலம் குளத்தின் கொள்ளவை உயர்த்தவும் முடிவு செய்தோம். இதையடுத்து, அணையில் மணல் மூட்டைகளை 4 வரிசைகளாக அடுக்கி, உயரத்தை அதிகரித்தோம். வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்ததும், 2 குளங்களும் நிரம்பியன. அதற்குப் பிறகு ஓரளவு பாசனம் நடந்தது.

எனினும், மழைக் காலத்தில் நொய்யலில் வெள்ளம் வந்தால் மட்டுமே குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். எனவே, இதற்கு மாற்று நடவடிக்கை குறித்தும் ஆலோசித்தோம்.

நொய்யலுக்கு நேரெதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மரப்பால பள்ளம் உள்ளது. அருகில் உள்ள கலங்கல் கிராமத்திலிருந்து வரும் காட்டாற்று தண்ணீர் இந்த பள்ளத்துக்கு வரும். அந்த தண்ணீரை திசைதிருப்பி, அங்கேயே ஒரு குட்டை வெட்டி, அதில் நீரை நிரப்பி அங்கிருந்து வாய்க்கால் மூலம் குளங்களுக்கு கொண்டுவந்தோம். ஒரு நாள் பெய்த மழையின்போது வந்த நீரே 2 குளங்களையும் நிரப்பிவிட்டது. ஆனால், நொய்யலில் வெள்ளம் வந்தால், இந்தக் குளங்கள் நிரம்ப 7 நாட்களாகும். எனவே, நொய்யல் வெள்ளத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்ற நிலை உருவானது.

குளத்தை பாதுகாக்க முயற்சி

இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென்பதற்காக கட்சி சார்பற்ற விவசாய சங்க உறுப்பினர்கள் சேர்ந்து, சூலூர் குளம் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தினோம். இந்த குளத்தை ஒட்டியுள்ள கிணறுகளில்தான் குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. எனவே, குளத்தில் 3 அடிக்குகீழ் தண்ணீர் எடுக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்தோம்.

வாய்க்கால்கள் பராமரிப்பு, அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள, குளப் பாதுகாப்பு குழுவினர் அளித்த சந்தா தொகையைப் பயன்படுத்தினோம். சூலூரின் குடிநீர்த் தேவையை சிறுவாணி, அத்திக்கடவு நீர் பூர்த்தி செய்ததால், குளங்களின் நீரை பாசனத்துக்கு மட்டும் பயன்படுத்திவருகிறோம்.

கோவை வாலாங்குளத்தைப்போல, சூலூர் குளத்திலும் சிலர் காய்கறிகள், கீரைகளைப் பயிர் செய்து, படிப்படியாக குளத்தை ஆக்கிரமித்தனர். அது குளத்துக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை குளத்திலிருந்து வெளியேற்ற ஊரே ஓரணியில் நின்றோம். கீரை, காய்கறி பயிர் செய்தவர்களுக்கு, குளத்தில் மீன் பிடிக்கும் பணியை அளித்தோம். அதற்கு ஈடாக, குளத்தைப் பராமரித்து, தூர் வாரும் பொறுப்பை அவர்களிடம் விட்டோம்.

மேலும், ஊரின் சாக்கடைகள் குளத்தில் கலக்காது இருக்கும் வகையில், உலக வங்கி திட்டத்தின் மூலம் 2003-ல் பேரூராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் நுண்ணுயிரி சுத்திகரிப்பு நிலையம் அமைத்தோம்.

கலங்கல் பகுதியிலிருந்து வரும் நீரே சூலூரின் மேல்குளம் (177 ஏக்கர்), கீழ்குளம் (85 ஏக்கர்) ஆகியவற்றை நிரப்புவதால், படிப்படியாக நொய்யல் அணையின் மீது வைத்திருந்த மணல் மூட்டைகள் அகற்றப்பட்டுவிட்டன. எனினும், அங்கு தூர் வாரி, மழைக்காலங்களில் நிரந்தரமாக வாய்க்காலுக்கு வெள்ளம் வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது, சூலூர் மேல்குளத்தின் மூலம் பெரிய அளவுக்கு சாகுபடி செய்யப்படுவதில்லை. அங்கு குடியிருப்புகள், மனைப் பிரிவுகள் ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், கீழ்ப்பகுதி குளத்தின் மூலம் 400 ஏக்கரில் பாசனம் நடக்கிறது. இதற்காக நீர்வளப் பாதுகாப்போர் சங்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி, குளத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பது குறித்து தொடர்ந்து விவாதிக்கிறோம் என்றார்.

இதேபோல, சூலூருக்கு முந்தைய ஊரான கண்ணம்பாளையம் பேரூராட்சியும், தனது ஊர்க் குளத்தைப் பாதுகாத்துள்ளது. சூலூர் ஒன்றியத்துக்குள் வரும் இந்தக் கிராமத்தின் வடக்கு எல்லையில், 66 ஏக்கர் பரப்பில் அமைள்ளது கண்ணம்பாளையம் குளம்.

நொய்யலில் வரும் வெள்ளம் வாய்க்கால்கள் மூலம் வெள்ளலூர், ஒட்டபாளையம் குளங்களை நிரப்பி, பின்னர் இங்கு வரவேண்டும். ஆனால் அங்கு வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதால், 20 ஆண்டுகளுக்கு முன்பே குளத்துக்கு நீர் வருவது தடைபட்டது. ஆக்கிரமிப்பை நீக்கி, வாய்க்காலைத் திறந்து விடக் கோரி விவசாயிகள், பொதுமக்கள் போராடினர். இதையடுத்து, அனைத்துக் கட்சியினரும் கொண்ட ‘கண்ணம்பாளையம் குளம் கமிட்டி’ ஏற்படுத்தப்பட்டது.

குட்டைகளில் நிரப்பப்பட்ட தண்ணீர்

மழைக்காலங்களில் நொய்யலில் வரும் வெள்ளம் குளத்துக்கு முறையாக விடப்பட்டது. குளமும் நிரம்பியது. இந்தக் குளம் ஊர்லிருந்து 40 அடி தாழ்வான பகுதியில் அமைந்திருந்ததால், நிலத்தடி நீர் உயரவில்லை. இதையடுத்து, குளத்துக்கு அருகில் கிணறு தோண்டி, 50 ஹெச்.பி. மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து, ஒரு அடி விட்டமுள்ள குழாய்கள் மூலம் 1.5 கிலோமீட்டர் தொலைவு கொண்டுசென்று, 4 ஏக்கர் மற்றும் 16 ஏக்கர் பரப்பில் ஊருக்குள் உள்ள குட்டைகளில் தண்ணீரை நிரப்புகின்றனர்.

அந்த குட்டையில் நீர் காலியாகும்போது, மீண்டும் மோட்டார் மூலம் நீர் ஏற்றுகிறார்கள். இதன் மூலம் மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் இருந்த 2 ஊர் குட்டைகளும், தற்போது ஆண்டுமுழுவதும் தண்ணீர் நிரம்பிக் காட்சியளிக்கிறது. இதனால் வறண்டுகிடந்த 20 பஞ்சாயத்து கிணறுகள், 25 ஆழ்குழாய்க் கிணறுகள், 150 விவசாயக் கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.

“பஞ்சாயத்து கிணறுகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் உள்ளதால், தினமும் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள 1,000 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. இந்த திட்டத்தை நமக்கு நாமே திட்டம் மூலம் செயல்படுத்தியுள்ளது பேரூராட்சி நிர்வாகம். மக்கள் பங்களிப்பாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அது குளத்தில் கிடைத்த மீனை விற்றதன் மூலம் கிடைத்த பணம். இப்போது, இந்தக் குளம்தான் எங்கள் ஊரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது” என்கிறார் கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன்.

பயணிக்கும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x