Published : 01 Aug 2015 10:30 AM
Last Updated : 01 Aug 2015 10:30 AM

நொய்யல் ஆற்றிலிருந்து மணல் கடத்தல்: விவசாயிகள் புகார்

நொய்யலாற்றில் டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 140 கி.மீ. பயணிக்கிறது. சாக்கடைக் கழிவுகள், சாயக் கழிவுகள் கலப்பதால் நொய்யல் ஆறு பாழாகியுள்ளது.

நொய்யல் ஆரம்பிக்கும் வெள்ளியங்கிரி மலை தொடங்கி நரசீபுரம், செம்மேடு, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் வரை சமீப காலமாக ஆற்றில் மணல் அள்ளப்படுவது அதிகரித்துள்ளதாக இப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

தொண்டாமுத்தூரை அடுத்த தென்னமல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் சிலர் கழுதைகளை கொண்டு ஆற்று மணலை மூட்டைகளாக கட்டி (100 கிலோ எடை) ஊருக்குள் எடுத்து வந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் விற்பனை செய்து வருகின்றனர். ஆற்று மணலை திருடுவதால், இப் பகுதியில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். தற்போது டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுகிறது. முன்பெல்லாம் இரவில் மணல் கடத்தல் நடந்தது. தற்போது பட்டப்பகலிலேயே நடக்கிறது.

நரசீபுரத்திலிருந்து பூண்டி செல்லும் சாலையில் சடையாண்டி, கன்னிமார் திருக்கோயில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் புதுப்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலத்தின் கிழக்கும் மேற்கும் நீளும் நொய்யலாற்றின் கரையை மணல் அள்ளுபவர்கள் குடைந்து விட்டனர். ஒரு பக்கம் பாலம் வேலை நடந்தாலும் மற்றொரு பக்கம் டிராக்டர்களில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடக்கிறது. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால், நொய்யலின் தோற்றுவாய்ப் பகுதியிலேயே ஆறு அழிவதோடு, மண் அரிப்பின் மூலம் ஆற்றின் போக்கும் திசை மாறும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்க அதிகாரி உறுதி

நரசீபுரம்-பூண்டி சாலை நொய்யல் ஆற்றங்கரையில் டிராக்டர்கள் மணல் மற்றும் மண் அள்ளும் விஷயத்தில் அரசு அனுமதி ஏதும் கொடுத்துள்ளதா என இப்பகுதி வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அனுமதி எதுவும் கொடுக்கப்படவில்லை. கனிம வளத்துறை அனுமதி தந்திருக்கலாம், அங்கே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.

கனிம வளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘ஆற்றுப் பகுதிகளில் மணல் எடுக்கும் அனுமதியை நாங்கள் தரமுடியாது. அதற்கு முழு பொறுப்பு பொதுப்பணித் துறைதான்’ என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அனுமதி எதுவும் கொடுக்கப்படவில்லை. நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x