Published : 30 Jan 2017 05:43 PM
Last Updated : 30 Jan 2017 05:43 PM

நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்க கோரி வாசன் அடுக்கும் காரணங்கள்

பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் தேர்வு முறையை அமல்படுத்துவதை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காரணங்களை அடுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "இந்திய மருத்துவக் கல்வியை உலகத் தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதேநேரத்தில் மருத்துவராகும் கனவோடு இருக்கின்ற மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு முறை பயன் தராது என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.

பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் தேர்வு முறையை மத்திய பாஜக அரசு அமல்படுத்த உள்ளது.

நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் படிக்கின்ற மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் பயில்கின்றனர். நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும்.

நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை மட்டும் கணக்கில் கொண்டு நடத்தப்படும் நீட் தேர்வு முறையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மத்திய பாடத்திட்டத்தின் கீழ் மட்டும் உள்ள வினாத்தாளுக்கு விடை அளிப்பது மிகவும் கடினமானது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்கு மத்திய அரசு 15 சதவீதம் இடஒதுக்கீடு செய்கிறது.

இந்தத் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால், தமிழக மாணவர்களுக்கு உள்ள இடஒதுக்கீடு வெளி மாநில மாணவர்களுக்கு கிடைக்கும். இதனால் தமிழக மாணவர்கள் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தடை ஏற்படும்.

கிராமப்புற சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு வாய்ப்பு பறிபோகாமல் இருப்பதற்கு நீட் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது.

இந்தத் தேர்வு முறைக்கு ஏற்கெனவே பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.

தமிழக அரசு நடைபெறுகின்ற இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே - நீட் தேர்வு முறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காக, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை சட்டபூர்வமாமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவ, மாணவிகள் சேர்வதற்கு உரிய இடஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வு முறைக்கு பதிலாக, ஏற்கனவே மருத்துவப் படிப்புகளுக்கு +2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்ற முறையினையே தமிழகத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்" என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x