Published : 09 Jul 2017 10:46 AM
Last Updated : 09 Jul 2017 10:46 AM

நிகர்நிலைப் பல்கலை மருத்துவ கலந்தாய்வு; மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

நிகர்நிலைப் பல்கலைக் கழக மருத்துவ கலந்தாய்வை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றியிருப்பதால், ஏழை மற்றும் ஊரக மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்திற்கு எதிரான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது; ஏற்கத்தக்கதல்ல.

நீட் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த மார்ச் 10-ஆம் தேதி அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில்,‘‘ தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசுகள் தான் மேற்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவ இடங்களை விற்பனை செய்வது தடுக்கப்படும் என நம்பினார்கள். ஆனால், மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு இதை சிதைத்து விட்டது.

மத்திய அரசு அண்மையில் பிறப்பித்துள்ள ஆணையில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே மாநில அரசு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும், அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் நடத்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தவாறு தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தும்பட்சத்தில் மாநில அரசின் மாணவர் சேர்க்கை விதிகள் தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் பொருந்தும். தமிழக அரசு விதிகளின்படி, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே அதன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்பதால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இடங்களும் தமிழகத்தினருக்கே கிடைக்கும். இதனால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் உருவெடுப்பர்.

ஆனால், இப்போது அனைத்து நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவை தலைமை இயக்குனர் அலுவலகம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துவதால், தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் கிடைக்கும். தமிழகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன; அவற்றுக்கு மாநில அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அந்த இடங்களை பிற மாநில மாணவர்களுக்கு மத்திய அரசே தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் சென்று விட்டதால் அந்த இடங்களுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரமும் மத்திய அரசிடம் சென்று விட்டது. மத்திய அரசும் தாராளமாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று அறிவித்து விட்டதால், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் மிக அதிகக் கட்டணம் நிர்ணயித்துள்ளன. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுக் கல்விக்கட்டணம் மிக அதிகமாக ரூ.22.50 லட்சமாகவும், போரூர் ராமச்சந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ரூ.22 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் குறைந்தபட்சக் கல்விக் கட்டணமே ஆண்டுக்கு ரூ.18 லட்சம் என்பதால் மருத்துவப் படிப்பை முடிக்கக் கல்விக்கட்டணமாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இது அனைவருக்கும் சாத்தியமற்ற அதிக கட்டணமாகும்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்பார்ட்டன் மருத்துவ பல்கலைக்கழகத்திலேயே கல்விக்கட்டணம், தங்கும் விடுதி, உணவுக்கட்டணம் ஆகிய அனைத்துக்கும் சேர்த்து 5 ஆண்டுகளுக்கு ரூ.65 லட்சம் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.85 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 லட்சமும் தான் கட்டணமாக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேதரத்திலான கல்வி தான் நிகர்நிலைப்பல்கலைகளிலும் வழங்கப்படுகிறது எனும் போது அங்கு மட்டும் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது முறையல்ல. சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 2015-ஆம் ஆண்டு வரை அதிகபட்சக் கட்டணமே ரூ. 8 லட்சமாக இருந்த நிலையில், இப்போது மூன்று மடங்கு அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படுவதும், அதை மத்திய அரசு அங்கீகரிப்பதும் மருத்துவக்கல்வி ஏழைகளுக்கு கிடைக்காமல் தடுத்து விடும்.

இந்நிலையை மாற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பப்பட வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே நிகர்நிலைப் பல்கலைகளுக்கும் பொருந்தும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் தான் அனைத்துத் தரப்பினரையும் மருத்துவர்களாக்க முடியும் என்பதால் தமிழக அரசும், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x