Published : 30 Jan 2017 12:34 PM
Last Updated : 30 Jan 2017 12:34 PM

தொழில் முதலீடு வாய்ப்புகளை இழக்கும் தமிழகம்: ஆந்திரத்தை சுட்டிக்காட்டி ராமதாஸ் கவலை

ஆந்திரத்தில் மொத்தம் 10.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருப்பாதாக சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தொழில் முதலீடு வாய்ப்புகளை தமிழகம் இழந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர அரசும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 10.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆந்திரத்தில் முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மொத்தம் 665 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக முதலீட்டு உத்தரவாதங்களை பெற்ற மாநிலம் என்ற பெருமையை இதன்மூலம் ஆந்திர அரசு பெற்றிருக்கிறது. ஆந்திரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி வாரியங்களில் மட்டும் ரூ.3 லட்சத்து 62,662 கோடி முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதற்காக 177 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.

இந்த நிதியை ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கடலோரப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கட்டமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும் தான் பொருளாதார வளர்ச்சி வாரியங்களின் பணியாகும். இதன்மூலம் ஆந்திரத்தில் பொருளாதார வளர்ச்சி விரைவுபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் பொருளாதார ஆணையரகங்கள் ஏற்படுத்தப்படும்; அவற்றின் மூலம் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. உலக அளவில் வெற்றி பெற்ற இந்த தத்துவத்தை கடைபிடித்து ஆந்திர அரசு மூன்றரை லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீட்டை ஈர்த்திருக்கிறது. ஆனால், இதுபோன்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் பற்றி சிந்தித்து பார்ப்பதற்கு கூட தமிழக அரசு தயாராக இல்லை. இதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு ஆகும்.

ஆந்திரத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்காக ரூ.2 லட்சத்து 1471 கோடி முதலீடு செய்வதற்காக 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடு கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் செய்யப்படவுள்ளன. ஆந்திராவின் புதிய தலைநகரம் அமையவிருக்கும் அமராவதி தலைநகரப்பகுதியில் மட்டும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.245 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த தொழில் திட்டங்களில் மட்டும் ரூ. 1.43 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இதில் ரூ.15,000 கோடி தனியார் முதலீடு தவிர மீதமுள்ள முதலீடுகளை இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி., கெயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ள நிறுவனங்கள் விண்ணப்பித்த 14 நாட்களில் புதிய தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அறிவித்துள்ளார். இந்த தொழில் திட்டங்களின் மூலம் 22.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனை மட்டும் தான் மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்களோ, பிறமாநில நிறுவனங்களோ முன்வரவில்லை என்பது தான் உண்மை. 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், இவை தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்பின் 17 மாதங்களாகிவிட்ட நிலையில், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 10 விழுக்காடு கூட முதலீடு செய்யப்படவில்லை. சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் பதிலில்லை. அதற்கு காரணம் குறிப்பிடும்படியாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தான்.'

அதேநேரத்தில், ஆந்திரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.4.67 கோடி முதலீட்டில் பாதிக்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு 14 நாட்களில் அனுமதி கிடைப்பதும், தொழில் தொடங்குவதற்கான நடைமுறை ஊழல் இல்லாமல் வெளிப்படையாக இருப்பதும் தான் அங்கு தொழில் முதலீடு குவிவதற்கும், பொருளாதார வளர்ச்சி பெருகுவதற்கும் காரணம் ஆகும்.

ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதும், தொழில் தொடங்குவது குறித்து முதலமைச்சரையோ, அமைச்சர்களையோ சந்தித்து பேசுவது சாத்தியமில்லை என்பதும் தான் இதற்கு காரணமாகும். தொழில் தொடங்குவதற்கான அனுமதி 30 நாட்களில் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதேநிலை நீடித்தால் தொழில்துறையிலும் தமிழகம் கடைசி இடத்தை பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, அரசு நிர்வாகத்தில் ஊழலை அடியோடு ஒழித்து, தொழில் தொடங்க முன்வருபவர்களை ஊக்குவித்து, தமிழகத்தை தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக மாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x