Published : 16 Sep 2016 10:08 AM
Last Updated : 16 Sep 2016 10:08 AM

தொற்று நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை

தமிழகம் முழுவதும் எடுக்கப் பட்டு வரும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்ட அரங்கில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் க.பணீந்தர ரெட்டி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயலாளர் விக்ரம் கபூர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டி.கார்த்தி கேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் க.மகரபூஷ ணம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் வேலுமணி பேசியதாவது: மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றில் கொசு ஒழிப்பு மருந்துகளை சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தொற்று நோய்களைப் பரப்பும் கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் உள்ளேயும், வெளியேயும், புகை அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத் துப் பகுதிகளிலும் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகள், குடிநீர் வழங்கல் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது சீராகும் வரை தினமும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். கொசுமுட்டை, புழுக்களை ஒழிக்க தேவையான மாத்திரை களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் உடனடியாக புதிய இயந்திரங்களை வாங்க வேண்டும்.பொது மக்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும். தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x