Published : 16 May 2016 03:26 PM
Last Updated : 16 May 2016 03:26 PM

தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாகச் சொன்னது வெற்று வார்த்தைகள் தானே தவிர, சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வாக்குப்பதிவு நாளாகிய மே -16 ல் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருந்தது. அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்தது.

இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பரவலாகவும், சில இடங்களில் கனமழையும் பெய்து கொண்டிருக்கிறது. மின்சார விநியோகம் தடைபட்டு இருக்கிறது. வாக்காளர்கள் நனையாமல் நிற்பதற்கான எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. ஜெனரேட்டர் ஏற்பாடும் இல்லை.

வாக்குச் சாவடிக்குள் முழு இருட்டில், தமது விருப்பத்துக்குரிய சின்னத்தைக் கண்டறிய முடியாமல், குழப்ப நிலையில், ஊகமாக பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டியிருக்கிறது. தமக்கான சின்னத்தை தெளிவாகப் பார்த்து வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாகச் சொன்னது வெற்று வார்த்தைகள் தானே தவிர, சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது அதன் தோல்வியையே காட்டுகிறது.

பெருமழைக்கு ஆளான பகுதிகளில், வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணிநேரம் அதிகரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியாகியுள்ள போது, இரண்டு தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைத்திருப்பது தேர்தல் ஆணையம் செயல்பட்டது போன்ற அடையாளத்தை ஏற்படுத்தவே உதவும். தேர்தலை நடத்தி இதே வேட்பாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டால், இந்த முறைகேடுகள் அங்கீகரிக்கப்பட்டதாகவே கொள்ளப்படும். இது எதிர்காலத்திலும் ஜனநாயக விரோத விதி மீறல்களைச் செய்ய உத்வேகமளிக்கும்.

ஆகவே சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, உரிய தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடந்தால், வெற்றி பெற்றவர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி முடிவுகள் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே மே 19ம் தேதிக்கு முந்தைய 17 அல்லது 18 தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களை நடத்த வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x