Published : 05 Dec 2015 08:10 PM
Last Updated : 05 Dec 2015 08:10 PM

துப்புரவுப் பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1000 பணியாளர்கள் சென்னைக்கு வரவழைப்பு

சென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியை வலுப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பை லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உணவு, 252 அம்மா உணவகங்கள் மற்றும் 4 மைய சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

200 வார்டுகளிலும் 292 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டு வருகிறது'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x