Published : 22 Mar 2017 01:45 PM
Last Updated : 22 Mar 2017 01:45 PM

துணைவேந்தர் நியமனத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குக: திருமாவளவன்

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அல்லது போதுமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில், நாடு முழுவதிலும் நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், கலை, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தும் வகையில் உயர்கல்வி வழங்கும் பணியில், 290 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களும், 201 தனியார் பல்கலைக்கழகங்களும், 73 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களும், 38 அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், 13 மாநில அரசு திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களும், 11 அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களும் மற்றும் பல பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கல்விக்கொள்கை, பல்கலைக்கழக கொடை ஆணையம் மற்றும் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதல்களுக்கேற்ப 21 தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இப்பல்கலைக்கழகங்களுக்கு தேர்வுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு மாநில அரசின் பரிந்துரையினடிப்படையில் துணைவேந்தர்களை மாநில ஆளுநர் நியமனம் செய்து வைப்பார்.

தமிழக உயர் கல்வித்துறையில் செயல்படும் 21 பல்கலைக்கழகங்களில் தலையும் தோள்களுமற்ற வெறும் சதைப்பிண்டங்கள் போன்று 9 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களும், 8 பல்கலைக் கழகங்களுக்கு முறையான பதிவாளர்களும் மற்றும் 10 பல்கலைக் கழகங்களுக்கு முறையான தேர்வுக்கட்டுப்பாட்டாளர்களும் இல்லாத நிலை கடந்த மூன்றாண்டுகளாக நிலவுகிறது.

இத்தகைய அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களிலும், சிண்டி கேட், செனட், நிர்வாகக்குழு மற்றும் மேலாண்மைக்குழுக்களில் மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அல்லது போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் அனைத்துத் தகுதிகளுமிருந்தும், இச்சமூக மக்கள் காலங்காலமாக வேண்டுமென விரும்பியே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு, பல ஆண்டுகளாகத் தொடரும் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களும், முறையான பதிவாளர்களும் மற்றும் முறையான தேர்வுக்கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறுவதில்லை. படித்து முடித்த இளைஞர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர் படிப்புக்கும் செல்ல முடியாமல், வேலைவாய்ப்புகளையும் தேடமுடியால் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

காலியாக உள்ள துணைவேந்தர்கள், முறையான பதிவாளர்கள் மற்றும் முறையான தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டுமெனக் கோரும் அதே வேளையில், சிண்டி கேட், செனட், நிர்வாகக்குழு மற்றும் மேலாண்மைக்குழுக்களில் மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அல்லது போதுமான பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமெனக்கோரி தமிழக ஆளுநருக்கும், தமிழக முதல்வருக்கும் தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி வெகு விரைவில் தமிழக ஆளுநரையும் முதல்வரையும் சந்திக்க உள்ளோம்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x