Published : 06 Jan 2015 08:59 AM
Last Updated : 06 Jan 2015 08:59 AM

திருப்பூர் திமுக பிரமுகர் கூலிப் படையினரால் படுகொலை

திருப்பூர் திமுக பிரமுகர் கூலிப் படையால், நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர், அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(58). இவர், சிட்கோ பகுதியில் செகண்ட்ஸ் பனியன் வியாபாரமும், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திமுக கிளைச் செயலாளர், மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார். சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில், 2-வது முறையாக திருப்பூர் வடக்கு மாவட்ட பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை நடைப்பயிற்சிக்காக வீட்டிலிருந்து வெளியே வந்த சுப்பிரமணியம், அதிகாலை அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தத்திலுள்ள பேக்கரியில் தேநீர் அருந்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, சாலையில் நடந்து சென்றவரை, அந்த வழியாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்குப் போராடிய சுப்பிர மணியம், திருப்பூர் குமார் நகரிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

15 வேலம்பாளையம் போலீஸார், சுப்பிரமணியத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத் துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய், தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

தொழில் போட்டியா?

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை, திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதால், இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் கூலிப் படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சுப்பிரமணியை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்தனர்? சமீபத்தில் நடந்த திமுக உட்கட்சித் தேர்தல் காரணமா? அல்லது தொழில் போட்டியா என பல்வேறு கோணங்களில், 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x