Last Updated : 30 Dec, 2016 12:15 PM

 

Published : 30 Dec 2016 12:15 PM
Last Updated : 30 Dec 2016 12:15 PM

திருச்சி மக்களை அச்சுறுத்தும் சாலை போக்குவரத்து: அதிகரிக்கும் விதிமீறல்கள், அதிவேக பயணத்தால் ஓராண்டில் ஆயிரம் பேர் விபத்தில் சிக்கிய அவலம்

அதிகரிக்கும் விதிமீறல்கள், அதிவேக பயணம் போன்றவற்றால் திருச்சி மாநகரில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 1000 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர்.

தமிழகத்தின் மையப்பகுதியிலுள்ள திருச்சி மாநகரம் 167.23 சதுர கி.மீ.பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கும் இந்நகரத்தின் வழியாக திருச்சி-தூத்துக்குடி (என்.எச்.45 பி), சென்னை தேனி (என்.எச்.45), நாகப்பட்டினம் ஊட்டி (என்.எச்.67), திருச்சி தேவிப்பட்டினம் (என்.எச்.210), திருச்சி சிதம்பரம் (என்.எச்.227) ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இவற்றின் வழியாகவும், மாநகர பகுதிக்குள்ளும் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

ஆக்கிரமிப்பு, விதிமீறல்…

எனினும் மக்கள்தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. குறுகலான சாலைகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் காந்தி மார்க்கெட், சப் ஜெயில் சாலை, பழைய பால்பண்ணை- மார்க்கெட் சாலை, ராக்கின்ஸ் சாலை, வயலூர் சாலை, பழைய மதுரை சாலை (ராஜா டாக்கீஸ்), சாலை ரோடு, கரூர் புறவழி இணைப்புச்சாலை (கே.டி. தியேட்டர்) போன்றவற்றில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கிடையே, இச்சாலைகள் வழியாக வாகனங்களை ஓட்டுவோர் பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. குறிப்பாக, ஒருவழிப்பாதையில் எதிரில் வருவது, செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவது, சிக்னல் விதிகளை மதிக்காமல் செல்வது, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது போன்ற விதிமீறல்கள் விபத்து ஏற்பட முக்கிய காரணங்களாகின்றன.

பழுதடைந்த சிக்னல்களால் விபத்து…

சிக்னல் கோளாறுகளும் விபத்துக்குக் காரணமாகின்றன. நேற்று முன்தினம் மாம்பழச்சாலை பகுதியில் சரிவர செயல்படாமல் பழுதடைந்த நிலையில் செயல்படும் சிக்னலால் ஒரு மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது. மாநகரில் பல இடங்களிலும் சிக்னல்களின் நிலை இப்படித்தான் உள்ளது. பழுதடைந்த சிக்னல்களை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

தனியார் பேருந்துகளின் சண்டை…

இவற்றைவிட, இங்கு இயக்கப்படும் தனியார் நகரப் பேருந்துகள்தான் மக்களின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தலாகவும், சவால் விடும் வகையிலும் உள்ளன. பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு வேகமாகச் செல்வது, சாலையை அடைத்துக்கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவது, முன்னால் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஏர் ஹாரனை பயன்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவது திருச்சியிலுள்ள தனியார் நகரப் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

இதுபோலவே சில இளைஞர்கள், போக்குவரத்துக்கான சாலைகளை பந்தயச் சாலைகளாகக் கருதி அதிவேகத்தில் “பறக்கின்றனர்”. இவர்களின் வேகப் போட்டியால் விபத்தில் சிக்கிய அப்பாவி மக்களும் ஏராளம். இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பாண்டில் விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாகிவிட்டது.

வாகன சோதனை என்ற பெயரில் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் போலீஸார், பந்தய இளைஞர்கள், தனியார் பேருந்துகளின் இதுபோன்ற விதிமீறல்களை பெரும்பாலும் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்படுவோரில் வெகுசிலர் மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். அந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில், திருச்சி மாநகரில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் கடந்தாண்டைவிட, நடப்பாண்டில் குறைந்துள்ளது என்ற போதிலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுச் செயலாளர் எஸ்.புஷ்பவனம் கூறும்போது,

“திருச்சி மாநகரச் சாலைகளில் செல்வோருக்கு பாதுகாப்பே இல்லை. விதிமீறல்கள் அதிகம் உள்ளது. சாலைகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது.

எவ்வித எச்சரிக்கை பலகையுமின்றி ஆங் காங்கே உள்ள வேகத்தடைகளால் விபத்துக்குள்ளாகி நாள் தோறும் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். ஆட்சியர் தலைமையில் இயங்கும் சாலைப் பாதுகாப்பு கமிட்டியில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து வல்லுநர்களையும், பொறியாளர்களையும் சேர்த்து, மாநகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளின் ஓரங்களிலும் நடைபாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,

“போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான், கடந்தாண்டு 134 ஆக இருந்த உயிரிழப்பு, நடப்பாண்டில் 109 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எங்களின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறோம். போக்குவரத்து குறித்த பிரச்சினைகளுக்கு இனி கூடுதல் கவனம் செலுத்தப்படும்” என்றனர்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.மஞ்சுநாதா கூறும்போது,

“போக்குவரத்து விதிமீறல்களை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். நகர் பகுதிக்குள் அதிவேகமாக இயக்கப்படும், நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கும் தனியார், அரசுப் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை ஓட்டினாலோ அல்லது ஏர் ஹார்னை பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதிகளில் பந்தயங்களில் ஈடுபடுவதுபோல, அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

விதிமீறியவர்களிடம் ரூ1.45 கோடி அபராதம்

திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாக 222 பேர், அதிக உயரத்தில் சுமை ஏற்றிக் கொண்டு வாகனங்களை ஓட்டியதாக 896 பேர், குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 1,628 பேர், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 68,530 பேர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 1,777 பேர், இன்சூரன்ஸ் புதுப்பிக்காதது உள்ளிட்ட இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 42,204 பேர் என மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 257 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1 கோடியே 45 லட்சத்து, 77 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி மாநகரில் 2014-ல் நேரிட்ட 633 விபத்துகளில் 160 பேர் பலியாகியுள்ளனர், 689 பேர் காயமடைந்துள்ளனர்.

2015-ல் 791 விபத்துகளில் 134 பேர் பலியாகியுள்ளனர், 696 பேர் காயமடைந்துள்ளனர்.

2016-ல் 628 விபத்துகளில் 109 பேர் பலியாகியுள்ளனர், 892 பேர் காயமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x