Published : 31 May 2016 09:10 AM
Last Updated : 31 May 2016 09:10 AM

திமுக - காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்க மத்திய உளவுத்துறை சதி: கருணாநிதி குற்றச்சாட்டு

திமுக - காங்கிரஸ் கூட்டணியை சீர்குலைக்க மத்திய உளவுத் துறை சதி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று கேள்வி - பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரூ.100 கோடிக் கும் அதிகமான பணத்தை தேர்தல் ஆணையமே கைப்பற்றியது. கரூரில் அன்புநாதன் என்பவரின் வீட்டில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டது. திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி சிக்கியது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் ரத்து செய்யப்பட்ட தேர்தலை நடத்தும் முன்பு இந்த விவகாரங் களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை களை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அங் கும் நேர்மையான தேர்தலை நடத்த முடியும்.

மத்திய உளவுத் துறை சதி

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் 8-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதுவே திமுக ஆட்சி அமைக்க முடியாத தற்கு காரணம் என திமுகவினர் விவாதித்து வருவதாக சில ஊடகங்கள் ‘கலக விதை’ ஊன்றி வருகின்றன.

‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளித ழுக்கு அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி கட்சிகளின் வெற் றிக்கு திமுக உறுப்பினர்கள் முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்’’ என தெரிவித்திருந்தேன்.

இதனை மறைத்து திமுக வுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப்பதற்கு சிலர் வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகிறார்கள். இந்தச் சேவையில் மத்திய அரசின் உளவுத் துறை யும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவ தாகவும், கற்பனை தகவல்களை பரப்பி வருவதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.

திமுக - காங்கிரஸ் இடையே யான உறவை சீர்குலைத்து தேசிய அரசியல் அரங்கில் திமுகவை தனிமைப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸை பலவீனப்படுத்தவும் திட்டமிட்டு அந்த சக்திகள் வேலை செய்கின்றன. அதே நேரத்தில் அதிமுக - பாஜக இடையே உள்ள மறைமுக கூட்டும், திரைமறைவு பேச்சும், பரஸ்பர லாபமும் தங்குதடையின்றி தொடரவும் வேலை நடக்கிறது என்பதை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும்.

கவரிமான் வேடமிட்ட புலி

தமிழகத்தின் நலனுக்காக திமுகவுடன் இணைந்து செயல் படத் தயார் என தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவின் நாக ரிகத்தையும், நல்லெண்ணத்தை யும் நான் கெடுத்துவிடுவேன் என சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ.வாக பதவியேற்க 5 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைக்குள் முதல் முறையாக சென்றேன். நான் பேரவைக்குள் வருவதை அறிந்த ஜெயலலிதா, விருட்டென எழுந்து வெளியேறி னார். இதுதான் அவரது நாகரிகம்.

அதிமுகவின் தொலைக்காட்சி யிலும், நாளிதழ்களிலும் என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றி யும் தொடர்ந்து அநாகரிகமான முறையில் விமர்சித்து வருகிறார் கள். அனைத்தையும் கண்டும், கேட்டும் அமைதியாக அரசியல் பயணம் செய்கிறேன். இவை யெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாமலா நடக்கின்றன? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை யில் அவர் வல்லவர். ஒரு பக்கம் அரசியல் நாகரிகத்தை அடித்து துவைத்து காயப்போடுவது, மறுபக்கம் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிப்பதைப்போல நாடகமாடுவதுதான் ஜெய லலிதாவின் அரசியல். கான கத்துக் கடும் புலி கவரிமான் வேடம் போடுகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x