Published : 28 Jun 2016 08:57 AM
Last Updated : 28 Jun 2016 08:57 AM

திமுகவில் இணைகிறது மக்கள் தேமுதிக

மக்கள் தேமுதிகவை திமுகவில் இணைக்க உள்ளதாக அக்கட்சி யின் தலைவர் வி.சி.சந்திரகுமார் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் கட்சியின் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து சந்திர குமார் உள்ளிட்டோர் தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

பின்னர், சந்திரகுமார் தலைமை யில் தேமுதிக அதிருப்தியாளர்கள் இணைந்து மக்கள் தேமுதிக என்ற இயக்கத்தை தொடங்கினர். திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், மக்கள் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இதில் ‘சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய திமுகவுக்கு நன்றி, தமிழக மக்களின் ஆதரவோடு எதிர்க்கட்சி ஆகியுள்ள திமுகவுக்கு வாழ்த்து, தேமுதிக நிர்வாகிகளுக்கு பிடிக்காத முடிவை எடுத்து அதன்மூலம் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு உதவிய விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோருக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி நடக்க மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது என்றும் விஜயகாந்த் மன்றத்திலும், தேமுதிகவிலும் 30 ஆண்டுகளுக்குமேல் உள்ள தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது:

விஜயகாந்தை நாங்கள் கேப்டன் என்று அழைத்தோம். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு வாங்கிய நாய்க்கு விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், கேப்டன் என்று பெயர் வைத்துள்ளார். அதனால் இனி விஜயகாந்தை கேப்டன் என்று சொல்ல மாட்டோம். தனது குடும்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத விஜயகாந்தால், கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. எனவே, நாங்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிருப்தியில் உள்ள தேமுதிகவினரை சந்திக்க வுள்ளோம். எங்கள் முடிவை திமுக தலைமையிடம் தெரிவித்த பின்னர் பிரம்மாண்டமான இணைப்பு விழாவை நடத்தவுள்ளோம். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேமுதிக இருக்காது.

இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்.

பொதுநல வழக்கு தொடருவோம்

சென்னையில் நேற்று நடந்த மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டத் துக்கு பிறகு, வி.சி.சந்திரகுமார் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தேமுதிக அறக்கட்டளைக்கு மாவட்ட செயலாளர்கள் தலா ரூ.27 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கொடுத்துள்ளனர். தேமுதிக அறக்கட்டளையில் ரூ.500 கோடி அளவுக்கு பணம் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், விஜயகாந்த், சுதீஷ், பிரேமலதா மட்டுமே அந்த அறக்கட்டளை யில் உள்ளனர். மக்கள் தேமுதிகவில் உள்ளவர்களும் தேமுதிக அறக்கட்டளைக்கு பணம் கொடுத்துள்ளனர். இந்த பணத்தை எப்படி மீட்பது என்று தெரியவில்லை. தேவைப் பட்டால் வழக்கறிஞர்கள் ஆலோ சனைப்படி, பொது நல வழக்கு தொடருவோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x