Published : 03 Jul 2017 11:57 AM
Last Updated : 03 Jul 2017 11:57 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் தீவிரமடையும் குடிநீர் தட்டுப்பாடு: தொடர்ந்து ஏமாற்றும் பருவமழையால் கூலி வேலையை விட்டுவிட்டு குடிநீர் தேடி அலையும் பெண்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கு வதில் ஏற்பட்ட தாமதத்தால் குடிநீர் பிரச்சினை மேலும் தீவிரமடைந்து வருகிறது. கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலையை விட்டுவிட்டு காலிக்குடங்களுடன் குழாய் முன் காத்திருப்பது, சாலை மறியல் செய்வது என்பது அன்றாட காட்சியாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றியதால், விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய் வறட்சியின் தாக்கம் தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்கள் வறண்டதால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே நகர் பகுதிகள் மட்டுமல்லாது, கிராமப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் பெண் கூலித் தொழிலாளிகள் வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டு, குடங்களுடன் குழாய் அடியில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத பகுதிகளில், மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்கிறது.

திண்டுக்கல் நகரில் தினமும் ஏதேனும் ஒரு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்துவரும் மழை அளவு

திண்டுக்கல் மாவட்டத்தின் சராசரி மழை அளவான 836 மில்லி மீட்டரில் 2016-ம் ஆண்டு 466.60 மி.மீ. மட்டுமே பெய்தது. 45 சதவீதத்துக்கு மேல் மழை அளவு குறைவாக பெய்தததால், வறட்சியின் தாக்கம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக ஜூனில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

ஆண்டின் முதல் 6 மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 231.10 மி.மீ. ஆனால், இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் முடிய பெய்த மழை அளவு 171 மில்லிமீட்டர். 60.10 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் அல்லாத பிற உபயோகத்துக்கு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

ஆயிரம் அடி வரை புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்தவர்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. நீர் ஆதாரங்கள் முற்றிலும் வறண்டு வருவது, நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றது ஆகியவை குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழியின்றி திணறி வருகின்றனர். இனியும் பருவமழை தாமதிக்காமல் ஜூலை முதல் வாரத்திலாவது தொடங்கினால்தான் குடிநீர் பிரச்சினையை ஓரளவுக்காவது சமாளிக்க முடியும் என்பதே திண்டுக்கல் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x