Published : 23 Jan 2014 09:33 PM
Last Updated : 23 Jan 2014 09:33 PM

திண்டுக்கல் சந்தையில் ரூ.1 கோடி வெங்காயம் தேக்கம்: வியாபாரிகள் போராட்டத்தால் விவசாயிகள் மறியல்

திண்டுக்கல் வெங்காயம் கமிஷன் மண்டி சந்தையில் ஏற்றுமதி வியாபாரிகள் போராட்டம் காரணமாக புதன்கிழமை ரூ.1 கோடி மதிப்புள்ள 10,000 வெங்காயம் மூட்டைகள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகாமல் தேக்கமடைந்தன. வியாபாரிகள் போராட்டத்தால் அதிருப்தியடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை வெங்காயப் பேட்டையில் தமிழகத்திலே மிகப்பெரிய வெங்காயக் கமிஷன் மண்டி சந்தை செயல்படுகிறது.

இந்தச் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட வெங்காய கமிஷன் மண்டிக் கடைகள் செயல்படுகின்றன. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தேனி, கரூர், திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் வெங்காயத்தை இந்த கமிஷன் மண்டி கடைகளில் விற்பதற்காகக் கொண்டு வருகின்றனர்.

கமிஷன் மண்டி வியாபாரிகள், கமிஷன் அடிப்படையில் விவசாயிகளிடம் வெங்காயத்தை கொள்முதல் செய்து, ஏற்றுமதி வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அவர்கள், வெங்காயத்தை வாங்கி தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கர்நாடகம், கேரளம், வடமாநிலங்களுக்கும், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வெங்காய மண்டி சந்தை வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நாள்களில் கூடுகிறது.

இந்த நிலையில் வெங்காய கமிஷன் மண்டியில் கமிஷன் வியாபாரிகள், ஏற்றுமதி வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து அடிமாட்டு விலைக்கு வெங்காயத்தைக் கேட்பதாகவும், மாதிரி எடுப்பதாகக் கூறி மூட்டைக்கு 5 கிலோ மச்சக்காய் கேட்பதால் நஷ்டமடைவதாகவும் விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் செய்தனர். வருவாய்த் துறையினர் வெங்காய கமிஷன் கடைகளில் விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திண்டுக்கல் தாசில்தார்கள் (மேற்கு) சிந்தாமணி, (கிழக்கு) வரதராஜன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை வெங்காய மண்டி கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு விவசாயிகளிடம் மச்சக்காய் கேட்கக்கூடாது எனவும், சிண்டிகேட் அமைக்காமல் உற்பத்திக்கு ஏற்ற நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கமிஷன் மண்டி வியாபாரிகள், ஏற்றுமதி வியாபாரிகளை எச்சரித்தனர்.

அதனால், புதன்கிழமை கூடிய சந்தையில் கமிஷன் மண்டி வியாபாரிகள், ஏற்றுமதி வியாபாரிகளுக்கு மச்சக்காய் வழங்கவில்லை. அதிருப்தியடைந்த ஏற்றுமதி வியாபாரிகள் விவசாயிகள் கொண்டுவந்த வெங்காயத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால், வெங்காய மண்டி கடைகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள 10,000 மூட்டை வெங்காயம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தேக்கமடைந்தன. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், வியாபாரிகளைக் கண்டித்து தாடிக்கொம்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீஸார் விவசாயிகளை சமாதானம் செய்தனர்.

இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தக சங்கத் தலைவர் சௌந்தர்ராஜனிடம் கேட்டபோது, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய முதலில் அவற்றின் மாதிரியை அனுப்ப வேண்டும். அதனால், மச்சக்காய் எடுக்கிறோம். மச்சக்காய் அனுப்பாவிட்டால் அவர்கள் ஆர்டர்களை வழங்குவதில்லை. தமிழகத்தின் மற்ற வெங்காய மார்க்கெட்டுகளைவிட இங்கு கூடுதல் விலைதான் நிர்ணயம் செய்கிறோம். பேச்சு மூலம் தீர்வுகாண விவசாயிகள்தான் வர மறுக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x