Published : 22 Mar 2017 08:18 AM
Last Updated : 22 Mar 2017 08:18 AM

தலைமை செயலகத்துக்கு வெளியே பட்ஜெட்டை கொண்டு செல்லலாமா? - நிதியமைச்சர் ஜெயக்குமார் - ஸ்டாலின் வாக்குவாதம்

தலைமைச் செயலகத்துக்கு வெளியே பட்ஜெட்டை கொண்டு செல்லலாமா என்பது தொடர்பாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று 2-வது நாளாக பட்ஜெட் மீது விவா தம் நடந்தது. திமுக உறுப்பினர் பேசியபோது நடந்த விவாதம்:

டி.உதயசூரியன் (திமுக):

கருணா நிதி, க.அன்பழகன், ஓ.பன்னீர் செல்வம் என இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்த பல நிதியமைச் சர்கள் ஒரு சிறிய பையில் பட்ஜெட் பிரதிகளை கொண்டு வருவார்கள். ஆனால், நிதியமைச்சர் டி.ஜெயக் குமார் அப்படி கொண்டு வரவில்லை (அதைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட வார்த்தையை பேரவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்).

நிதியமைச்சர் டி.ஜெயக்குமார்:

முன்பு சில ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் பட்ஜெட் போடப் பட்டது. அதனால், சிறிய பையில் பட்ஜெட்டை கொண்டு வந்தனர். இப்போது ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்படுகிறது. அதற்கேற்ப பக்கங்கள் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் இருந்து அதிக அளவு வருமான வரி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், யானைப் பசிக்கு சோளப்பொறிபோல நமக்கு குறைவான நிதியே கிடைக்கிறது. மத்திய அரசில் சுமார் 17 ஆண்டு கள் திமுக அங்கம் வகித்தது. அப்போது மத்திய அரசிடம் இருந்து போராடி தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற் றிருந்தால் தமிழகம் இன்னும் வேகமாக முன்னேறியிருக்கும்.

(இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று கோஷ மிட்டனர்)

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:

திமுக உறுப்பினர் உதய சூரியன் பேசியதற்கு பதில் அளிக்காமல் அமைச்சர் ஏதேதோ பேசுகிறார். மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது என்ன சாதித்தீர்கள் என கேட்கிறார். தங்கநாற்கர சாலை திட்டம், சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், மெட்ரோ ரயில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் என நீண்ட பட்டியலை என்னால் தர முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால், இதை மீறி தலைமைச் செயலகத்துக்கு வெளியே பட்ஜெட்டை அமைச்சர் எடுத்துச் சென்றதை தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இது நியாயம்தானா?

நிதியமைச்சர் ஜெயக்குமார்:

ரகசியங்களை வெளியே சொல் லக் கூடாது என உறுதிமொழி ஏற்றுதான் பதவிக்கு வந்துள் ளோம். பட்ஜெட்டில் உள்ள தகவல்கள் ஊடகங்களில் வெளி வந்திருந்தால் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜெய லலிதா நினைவிடத்தில் ஆசி பெறுவதற்காகவே அங்கு சென்றேன்.

மு.க.ஸ்டாலின்:

ஜெயலலிதா நினைவிடத்தில் ஆசி பெறுவது உங்கள் உரிமை. அதுகுறித்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. மரபுகளை மீறி தலைமைச் செயலகத்துக்கு வெளியே பட்ஜெட்டை எடுத்துச் சென்றது சரியா என்பதுதான் எங்களின் கேள்வி. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

நிதியமைச்சர் ஜெயக்குமார்:

இதில் மரபு மீறல் எதுவும் இல்லை. நிதியமைச்சர்கள் பட் ஜெட்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றதே இல்லையா?

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். பேரவை முன்னவர் கே.ஏ.செங் கோட்டையனின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் ஆகியோர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x