Published : 06 Oct 2016 08:45 AM
Last Updated : 06 Oct 2016 08:45 AM

தலித் இளைஞர் கொலையில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவிழா நன்கொடை வசூல் செய்யும் பிரச்சினையில் தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

மதுரை தத்தனேரி அருகே அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த தவமணி மகன் சரவணன் (27). ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இந்தப் பகுதியில் கோயில் விழாக்களில் நன்கொடை வசூல் செய்வது, கோயில் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்வது போன்ற பணிகளை செய்து வந்தார். இதே போன்ற பணிகளை செய்துவந்த சிலருக்கும் சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதம் காரணமாக சரவணன் 17.5.2011-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் கொலை, வன்கொடுமை தடுப்பு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமார், ஜெயபாண்டி, செல்வகுமார், விவேக், விக்னேஷ், சரவணகுமார் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை மதுரை 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.பாலசண்முகம் வாதிட்டார்.

விசாரணை முடிவு பெற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x