Published : 07 Apr 2015 05:15 PM
Last Updated : 07 Apr 2015 05:15 PM

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: மனித உரிமை மீறலை விசாரிக்க வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஓ.பி.எஸ். கடிதம்

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் உள்ளதா என்பது குறித்து நம்பகமான, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

சேஷாசலம் - ஸ்ரீவாரிமெட்டு எனும் வனப்பகுதியில் இன்று (7.4.2015) காலை செம்மரக் கடத்தல் ஒழிப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியானது குறித்து நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன்.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றாலும், இவ்வளவு பேர் பலியான இந்த நடவடிக்கையின்போது ஆந்திர அதிரடிப் படையினர் போதுமான நிதானத்துடன் செயல்பட்டார்களா என்பது பற்றி கவலைகளை எழுப்புகின்றன.

இவர்கள் சட்டவிரோத மரம் வெட்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இவ்வளவு பேர் பலியாகும் ஓர் அதிரடி நடவடிக்கை தேவைதானா என்ற கேள்விகளை எழுப்புகிறது.

இந்தச் சூழ்நிலைகளில், இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விரைவான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் உண்மைகள் நிறுவப்பட்டு, மனித உரிமை மீறல்கள் இருந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை நிர்ணயிக்க முடியும்.

மனித உரிமை மீறல்கள் இருக்குமாயின், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதும் முக்கியமானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x