Published : 07 Dec 2016 03:03 PM
Last Updated : 07 Dec 2016 03:03 PM

தமிழக காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது வரையிலான பதற்றமும் பரிதவிப்புகளும் மிகுந்த நேரத்தில், தமிழக காவல்துறையின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் குறித்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அன்று காலை முதலே, ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்கு கடைகளில் குவிந்தனர்.

அப்போலோ மருத்துவமனையிலுருந்து ஜெயலலிதாவின் உடல் போயஸ் தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து செவ்வாய்கிழமை அதிகாலை ராஜாஜி அரங்குக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மாலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு இடத்துக்கு ஜெயலலிதாவின் உடல் பயணிக்கும்போதும் காவல்துறையினர், பொதுமக்களை ஒழுங்குப்படுத்தி எந்தவொரு பிரச்சினையுமின்றி பார்த்துக் கொண்டனர். மேலும், அவர்கள் உணவு மற்றும் தண்ணீருக்கு என்ன செய்தார்கள், கழிப்பிட வசதிக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருந்தது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எதுவுமே ஏற்படவில்லை என்றால், அதற்கு தமிழக காவல்துறையின் பணிதான் முக்கிய காரணம் என்கின்றனர். மேலும், சமூக வலைத்தளத்தில் பலரும், காவல்துறையினர் ஒன்றாக கீழே அமர்ந்து உணவு உண்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்தார்கள்.

இதற்கு முன்பாக அதிகப்படியான பொதுமக்களிடமிருந்து தமிழக காவல்துறைக்கு இந்த அளவுக்கு பாராட்டு கிடைத்திருக்குமா என வரலாற்றைத் தேடினால், அதில் கடந்த ஆண்டு இதே நாட்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலம் நினைவுக்கு வருகிறது.

சமூகவலைத்தளத்தில் திரையுலகினரிடமிருந்து காவல்துறைக்குக் கிடைத்த பாராட்டுகள்:

கனிமொழி எம்.பி.: இந்த இடர்பாடுகள் மிகுந்த நேரத்தில், தமிழக காவல்துறையின் போலீஸார், பெண் போலீஸாரின் பணிகளை மறக்க முடியாது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்: கற்பனை கூட செய்து பார்க்கமுடியாததை செய்த தமிழ்நாடு காவல்துறையை வணங்குகிறேன்.

குஷ்பு: தமிழ்நாடு காவல்துறையையும், பொது மக்களையும், தொண்டர்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நிதானத்தைக் கடைபிடித்து மறைந்த முதல்வருக்கு மிகச் சரியாக பிரியாவிடை தந்தீர்கள். கண்டிப்பாக அவர் இதை விரும்பியிருப்பார். புன்னகைத்திருப்பார்.

ஜி.வி.பிரகாஷ்: இந்த கடினமான சூழலில், தன்னலமற்ற, கடின உழைப்பைத் தந்த தமிழக காவல்துறைக்கு மிகப்பெரிய வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இயக்குநர் கெளதம் மேனன்: மாநிலத்துக்காக சரியாக காவலில் நின்ற துறைக்கு வணக்கங்கள். தமிழ்நாடு காவல்துறை தான் மிகச்சிறந்தது.

எஸ்.வி.சேகர்: சரியான திட்டமிடலுக்கும், செய்ல்படுத்தலுக்கும் தமிழக காவல்துறைக்கும், ஐபிஎஸ் ஜார்ஜுக்கு வாழ்த்துகள்.

திவ்யதர்ஷினி: சட்டம் - ஒழுங்கை பாதுகாத்த தமிழக காவல்துறைக்கு என் வணக்கங்கள். மிகப்பெரிய பலம். ஒழுக்கத்துடன் இரங்கல் தெரிவித்தது, தூக்கத்தில் இருந்தாலும் அம்மாவின் சக்தியை காட்டியது.

அருண்விஜய்: மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு நிரூபித்துவிட்டது. இந்த சூழலை அமைதியாக கையாள ஒத்துழைத்த நமது மக்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. தமிழக காவல்துறைக்கு எனது வணக்கங்கள்!!

மடோனா செபஸ்டின்: மாநிலத்துக்குள் அமைதியைப் பேண அயராது உழைத்த தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு என் வணக்கங்கள்.

பாலசரவணன்: நமது மக்களின் பாதுகாப்புக்கும், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு அமைதியாக நடக்கவும் உறுதுணையாயிருந்த தமிழக காவல்துறைக்கு நன்றியும், வணக்கங்களும்.

இயக்குநர் கார்த்திக் ராஜூ: தமிழக காவல்துறைக்கு வணக்கங்கள். அவர்கள் இன்று சாப்பிடார்களா இல்லையா என்று தெரியவில்லை. அடிப்படை இயற்கை உபாதைகளை எப்படி சமாளித்தார்கள் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக அவர்களைப் பற்றி நினைவுகூர வேண்டும். மரியாதை கூடியுள்ளது

ஒளிப்பதிவாளர் திரு: மறைந்து முதல்வரின் கடைசி பயணம் அமைதியாக நடக்க, இரவு - பகல் பாராது உழைத்த தமிழக காவல்துறைக்கு என் வணக்கங்கள்.

காவல்துறைக்குக் கிடைத்த பாராட்டுகளில் சில:

* காவல்துறை மீது எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும்... இந்தப் படங்களே விளக்கிடும் அவர்கள் செய்யும் தியாகங்களை...

* தமிழ்நாட்டில் அமைதி நிலைநாட்ட இரவு பகல் பாராமல் கண்விழ்த்த காவல்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்...

* எவ்ளோ சல்யூட் அடிச்சாலும் பத்தாது, தமிழக காவல்துறை.

* ஒரு பூ கூட அதிராமல் 36 மணி நேரமாய் கண்ணுறங்காமல் கவனமாய் பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறை இதயங்களுக்கு கோடான கோடி நன்றியை சமர்ப்பிப்போம்.

* ஆயிரம் எதிர்மறைகள் இருப்பினும் வெள்ளம், கலாம், ஜெ. இறுதி நிகழ்வுகள் என தன் அசாதாரண உழைப்பால் கணக்கை நேர் செய்துகொள்கிறது காவல்துறை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x