தமிழக கட்சிகள் 2016: வாக்கு சதவீதமும் புதிய பேரவை பலமும்

Published : 20 May 2016 12:26 IST
Updated : 20 May 2016 16:21 IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத நிலவரம் மற்றும் புதிய சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் குறித்த அலசலே இது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவியதால் வாக்குகள் சிதறியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள வாக்கு சதவீத விவரம் பின்வருமாறு:

வியாழக்கிழமை (19.05.2016) இரவு 11.52 மணி கடைசி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

இரவு 11.52 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.4%, பாமக 5.3%, பாஜக 2.8%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.7%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5% வாக்குகள் பெற்றுள்ளன.

நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர். நோட்டா வாக்கு சதவீதம் 1.3%.கட்சிகள்

வாக்கு சதவீதம்

அதிமுக

40.8%

திமுக

31.6%

காங்கிரஸ்

6.4%

பாமக

5.3%

பாஜக

2.8%

தேமுதிக

2.4%

நாம் தமிழர் கட்சி

1.1%

மதிமுக

0.9%

விசிக

0.8%

சிபிஐ

0.8%

சிபிஎம்

0.7%

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

0.7%

தமாகா

0.5%அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.

புதிய சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் எப்படி?

அமையவுள்ள புதிய சட்டப்பேரவையில் அதிமுக 131 இடங்களுடன் வலுவான நிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியன தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இத்தேர்தலில் கட்சிகளில் பல நிலவரத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 29 பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பாமகவுக்கும் அதே நிலைதான். 2011-ல் பாமக எம்.எல்.ஏ.க்கள் மூவர். இந்தமுறை ஒருவர்கூட இல்லை. | காண்க - இந்தச் செய்தியின் முதல் வரைபடம்.

இல்லாமல்போன இடதுசாரிகள்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் கடந்த 2011 தேர்தல் வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இடதுசாரிகள் சட்டப் பேரவையில் இடம்பெற்றிருந்தனர். தனியாகவும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை வெற்றி பெற்று வந்தன. சிபிஐ, சிபிஎம் என இரு கட்சிகளும் ஒன்றாக இருந்த போதும், பின்பு பிரிந்த போதும் இடதுசாரிகளின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த பல ஆண்டு காலமாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வந்த இடதுசாரிகள் இந்த முறை விசிக, மதிமுகவுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கின. அந்தக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் இணைந்தது. ஆனால், இந்த அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முறையாக இடதுசாரி கட்சிகள் இல்லாத சட்டப்பேரவையாக இந்த சட்டப்பேரவை அமையவுள்ளது.

சற்றே முன்னேறிய காங்கிரஸ்..

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை மக்கள் மன்றத்தில் 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. இம்முறை கூடுதலாக 3 தொகுதிகள் என 8 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மமக, சமக வாஷ் அவுட்:

கடந்த முறை மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த முறை அக்கட்சிகள் முழுமையாக வாஷ் அவுட் ஆகியுள்ளன.

அதேபோல், போன தேர்தலில் தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சிகளுக்கு இம்முறை வெற்றி பெறவில்லை.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor