Published : 01 Jan 2017 06:30 PM
Last Updated : 01 Jan 2017 06:30 PM

தமிழக அரசு நொடிப் பொழுதும் தாமதமின்றி விவசாயிகளை காக்க வேண்டும்: முத்தரசன்

வறட்சியின் கோரப்பிடியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற நொடிப் பொழுதும் காலதாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ''வறட்சியின் கோரப்பிடியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற நொடிப் பொழுதும் காலதாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்ட கர்நாடக அரசு, துணை போன மத்திய அரசின் துரோகம் இருபருவ மழைகளும் பொழியாத இயற்கையின் கோபம் அனைத்துமாக சேர்ந்து காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழகமும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிதவிப்பதை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ இயலாது.

விவசாயிகள் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் அழிந்து, பயிர்கள் கண்முன்னே கருகி சாம்பலாகிக் கொண்டிருப்பதை சகிக்க இயலாமல் கடந்த மூன்று மாத காலமாக தொடர்ச்சியாக அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ளனர்.நேற்றைய தினம் மட்டும் 13 விவசாயிகள் மரணமடைந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் அவநம்பிக்கையை போக்கி, மரணங்களில் இருந்து காப்பாற்றக் கூடிய, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 30.12.2016 ல் அமைச்சர்கள் குழு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசியது வரவேற்றக்தக்கது.

கோரிக்கைகளை செவிமடுத்து கேட்ட அமைச்சர்கள் குழு, கோரிக்கைகள் குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்தார்கள். அத்தகைய நல்ல முடிவுகளை தாமதமின்றி அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களை காக்கவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் அரசின் முன் உள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கண்டு அஞ்சாது, அதிர்ச்சி அடையாமல் தற்கொலை பாதைக்கு செல்லாமல், நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அரசுக்கு எடுத்துக் கூறி, வலிமையான போராட்டங்களை நடத்தி வெற்றி காண்பதற்குரிய நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வோம்.

அதிர்ச்சி மரணத்தாலோ தற்கொலை செய்து கொள்வதாலோ நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. ஒன்றுபட்டு போராட முன் வாருங்கள் என விவசாய பெருங்குடி மக்களை கேட்டுக் கொள்கிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x