Published : 31 Jan 2017 06:04 PM
Last Updated : 31 Jan 2017 06:04 PM

தமிழக அரசின் புதிய ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் புதிய ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்திய விலங்கு நல வாரியம், கம்பாஷன் அன் லிமிடெட் பிளஸ் ஆக்‌ஷன் மற்றும் விலங்கு நல உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

மேலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டை அனுமதித்து ஜனவரி 7, 2016-ல் வெளியிட்ட அறிவிப்பாணையையும் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எனினும் தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக என்.ஜி.ஓ.க்கள் 2 வாரங்களுக்குள் புதிய ரிட் மனுக்கள் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இருப்பினும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, தமிழக அரசின் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்பப் பெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்குகள் செல்லாதவையாகிறது என்று கூறினார்.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பராசரன் கூறும்போது, தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் எனவும், இதனால் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.

விசாரணையின் போது ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்தவை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக, இந்திய மிருக வதை தடுப்புச் சட்டம்-1960-ல் திருத்தம் மேற்கொண்டு கடந்த 23-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் இல்லாத வகையில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டன. இச்சட்டம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனிடையே, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்திய பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது. கம்பாசன் அன்லிமிடெட் அண்டு ஆக்ஷன் (சியுபிஏ) என்ற அமைப்பும் வேறு சில பிராணிகள் நல ஆர்வலர்களும் தமிழக சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.

அதேவேளையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி, கடந்த 7.1.2016-ல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டதற்கான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இவ்வழக்கில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், 'மிருக வதை தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக சட்டப்பேரவை சட்டம் நிறைவேற்றியிருப்பது சட்டப்பேரவை யின் உரிமை. இதை கேள்வி கேட்க முடியாது. மேலும், மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம், கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றும் செயல் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி சர்மா...

இதனிடையே, இந்திய பிராணிகள் நல வாரியம் சார்பில், வாரியத்தின் ஒப்புதல் பெறாமல் தமிழக சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்து விட்டதாக புகார் எழுந்தது. இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று நல வாரியத்தின் செயலர் எம்.ரவிக்குமார் அதன் வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை அஞ்சலி சர்மா மறுத்துவிட்டார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டபோதே, அதை எதிர்த்து இந்திய பிராணிகள் நல வாரியம் வழக்கு தொடர ஒப்புதல் அளித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரியில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு சட்டத்திற்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு வாரியத்தின் செயலர் ஒப்புதல் வழங்கி எனக்கு இ-மெயில் மூலம் கடந்த 24-ம் தேதி அனுமதி அளித்துள்ளார். .

இந்த மனு தாக்கல் செய்ய ஏற்கெனவே வாரியம் அளித்துள்ள ஒப்புதலே போதுமானது. அதே உறுப்பினர்கள்தான் இப்போதும் உள்ளனர். தலைவர் மட்டும் தான் மாறியுள்ளார். மேலும், வாரியத்தில் நானும் ஓர் உறுப்பினர். வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தவிர, இந்த வழக்கில் நான் தனிப்பட்ட முறையில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அந்த அடிப்படையில் நான் புதிதாக மனு தாக்கல் செய்ய எந்த தடையும் இல்லை. எனவே, பிராணிகள் நல வாரிய செயலரின் உத்தரவு என்னை சட்டரீதியாக கட்டுப்படுத்தாது என்று அஞ்சலி சர்மா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x