Last Updated : 18 Jan, 2017 03:32 PM

 

Published : 18 Jan 2017 03:32 PM
Last Updated : 18 Jan 2017 03:32 PM

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஓராண்டுக்குள் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஓராண்டுக்குள் எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தவும், வறுமை கோட்டிற்குள் கீழுள்ளவர்களுக்கு இலவசமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த சி.ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 13 எம்ஆர்ஐ மையங்களும், 29 சிடி ஸ்கேன் மையங்களும் செயல்படுகின்றன. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் அமைக்கப்படும். தூத்துக்குடி, சிவகங்கை, திருவாருர், கன்னியாகுமரி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்கள் ஏற்படுத்தப்படும். பிற மாநிலங்களை ஒப்பிடும் போது அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்களில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு இலவசமாகவும், மற்ற நோயாளிகளுக்கு கட்டணம் வாங்கியும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஓராண்டுக்குள் எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது எம்ஆர்ஐ ஸ்கேன் மையங்களில் வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு இலவசமாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்க மறுத்து, அதற்காக தனியாக மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கூறினர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x