Published : 22 Mar 2017 09:08 AM
Last Updated : 22 Mar 2017 09:08 AM

தமிழகத்துக்கான நிதியைப் பெற மத்திய அரசுக்கு எம்.பி.க்கள் அழுத்தம் தரவேண்டும்: காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி வலியுறுத்தல்

தமிழகத்துக்கான நிதியைப் பெற, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி வலியுறுத் தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:

எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்):

தமிழகத்தில் நிதி நிர்வாகம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசின் கடன் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இதுதவிர பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கும் அதிகம். கடன்களை குறைக்க தேவையான திட்டங்களை செயல் படுத்த வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை கேட்டுப் பெற வேண்டும். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது அனை வருக்கும் கல்வி இயக்கம், மத்திய இடைநிலை கல்வி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. கல்விக் கடன்களை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தள்ளுபடி செய்ய வேண்டும். பண்ணை சாரா கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி ரூ.600 வரை விற்கப்படுகிறது. இதை பொதுமக்களுக்கு இலவச மாக வழங்க வேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜு:

தமிழகத்தில் இதுவரை ரூ.5,318 கோடிக்கு மேல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ரூ.1,338 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட் டுள்ளது. பண்ணை சாரா கடன் களை பொறுத்தவரை ஏற்கெனவே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கோரிக்கைகள் வரப் பெற்றால் முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல் படி, சிகிச்சை அளிக்கும் மருத் துவர்கள், செவிலியர்கள், மருத் துவ பணியாளர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. தற்போது 4 லட்சம் தடுப்பூசி இருப்பில் உள்ளது.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:

தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.5,357 கோடி அளவுக்கு தர வேண்டியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் திட்டங்களுக்கு பணிகளை முடித்த பின், நிதியை நாம் கோரிப் பெறுகிறோம். நமது எம்.பி.க்களும் இது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு உரிய நிதியை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x