Published : 31 May 2016 05:25 PM
Last Updated : 31 May 2016 05:25 PM

தமிழகத்தில் 16,883 பள்ளி வாகனங்கள் ஆய்வு: போக்குவரத்து ஆணையர் தகவல்

தமிழகத்தில் 16 ஆயிரத்து 883 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சத்தியப் பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முன், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி வாகனங்களை பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் வருவாய், போக்குவரத்து, காவல் மற்றும் பள்ளி கல்வித்துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது.

ஆய்வின் போது, வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதிவாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவர்கள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டுக்கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் 27 ஆயிரத்து 472 வாகனங்களில் கடந்த 27-ம் தேதி வரை 16 ஆயிரத்து 883 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 971 வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 912 வாகனங்களில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் 264 வாகனங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மறு ஆய்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 7 ஆயிரத்து 589 மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய ஆயிரத்து 648 வாகனங்களும் இம்மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்படும்.

சென்னை தென் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 11 பள்ளிகளின் 72 வாகனங்கள் செட்டிநாடு வித்தியாஸ்ரம பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இதை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில்பார்வையிட்டார்'' என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x