Published : 22 Mar 2017 11:38 AM
Last Updated : 22 Mar 2017 11:38 AM

தன்னாட்சி நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கக் கோரும் ஆணையை திரும்பப் பெறுக: ராமதாஸ்

தன்னாட்சி நிறுவனங்களின் வருவாயை 30% அதிகரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு நிதி உதவி பெறும் தன்னாட்சி நிறுவனங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் சுமையை சமாளிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் 30% கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் கீழ் சுமார் 600 தன்னாட்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவமனை, பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை, டெல்லி உட்பட பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கல்வி சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 600 தன்னாட்சி நிறுவனங்களில் 400-க்கும் மேற்பட்டவை கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஆகும். ஜனவரி 13-ம் தேதியிட்ட இந்த ஆணையால் கல்வி மற்றும் மருத்துவக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக புதுச்சேரியில் ஜவகர்லால் நேரு முதுநிலை மதுத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இலவச மருத்துவம் வழங்கும் நிறுவனமாக ஜிப்மர் தான் திகழ்கிறது.

இதன் தேவையை உணர்ந்து தான் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினார். அத்துடன் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்ததுடன்,அதன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், உள்ளூர் மாணவர்களுக்கான தனி இடஒதுக்கீடும் தொடர வகை செய்தார். இதற்கெல்லாம் மேலாக அங்கு வரும் நோயர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படுவது தொடரவும் வகை செய்யப்பட்டது.

அதனால் தான் ஜிப்மர் மருத்துவமனை புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றித் தரும் மந்திர பூமியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அவ்வாறு இருக்கும் போது ஜிப்மர் மருத்துவமனையின் வருவாயை 30% அளவுக்கு பெருக்குவது எவ்வாறு சாத்தியமாகும். ஜிப்மர் மருத்துவமனையின் உயர் வருவாய் பிரிவினருக்கான சிறப்பு வார்டுகளைத் தவிர மற்ற அனைவருக்கும் இலவச மருத்துவம் தான் அளிக்கப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சகம் இப்போது பிறப்பித்துள்ள உத்தரவால் ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவம் பெற வருவோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் பிற கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களின் வருவாயை உயர்த்துவதற்கும் கல்விக்கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகின் வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ள நாடுகளிலும் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் இந்தியாவிலும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை முழுமையாக இலவசமாக வழங்காமல் ஏற்கனவே வழங்கப்படும் சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தூண்டுவது எந்த வகையில் மக்கள் நலன் காக்கும் நல்ல அரசுக்கு அடையாளமாக இருக்க முடியும்?

வருவாய் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் வருவாயை அதிகரிக்கும்படி மத்திய நிதியமைச்சகம் ஆணையிட்டால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஆனால், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை வணிக நோக்கத்துடன் அணுகுவதும், அவற்றின் வருவாயை பெருக்கும்படி கட்டாயப்படுத்துவதும் எதிர்கால மனிதவளத்தையும், உடல்நலத்தையும் சீர்குலைத்து விடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தன்னாட்சி நிறுவனங்களின் வருவாயை 30% அதிகரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அத்துடன் கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்த வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x