Published : 30 Jan 2017 10:09 AM
Last Updated : 30 Jan 2017 10:09 AM

தன்னம்பிக்கை இருந்தால் பெண்களின் வாழ்க்கை வளமாகும்: திருச்சியில் நடைபெற்ற ‘தி இந்து- பெண் இன்று’ மகளிர் திருவிழாவில் அறிவுரை

தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் பெண்களின் வாழ்க்கை வளமாக அமையும் என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான த.ஜெயந்திராணி தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நான்காம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாசகர் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பிதழாக ஞாயிறுதோறும் வெளியாகும் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலி, மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதி இந்திரா காந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழாவை, வழக்கறிஞர் ஜெயந்திராணி, கவிஞர் லால்குடி ஜோதி, ஆசிரியர் அன்னலட்சுமி, காவல் துறை ஆய்வாளர் என்.ஷீலா, உதவி ஆய்வாளர் சண்முகபிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தனர்.

‘பெண்களுக்கான சட்டங்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான த.ஜெயந்திராணி பேசியபோது, “பெண்களின் பாதுகாப்புக்கென 85-க்கும் அதிகமான சட்டங்கள் உள்ளன. எனவே, எதற்கும் தயங்காமல் தங்களுக்கு இழைக்கப் படும் எந்தவொரு தவறையும் பெண் கள் வெளிக்கொணர வேண்டும். பெண்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டுப் பழக வேண்டும். வெற்றுத்தாளில் கையெழுத்திடக் கூடாது. தன்னம்பிக்கையுடன், எதையும் எதிர்க்கும் தைரியமும் இருந்தால் பெண்களின் வாழ்க்கை வளமாக அமையும்” என்றார்.

விழாவில், வாசகிகள் எழுப்பிய காவல் துறை தொடர்பான பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங் களுக்கு திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் என்.ஷீலா பதிலளித்துப் பேசினார்.

அதைத்தொடர்ந்து, சமூக விரோதிகளிடம் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் ஆர்.அரவிந்தன் தலைமையில் கமாண்டோ பயிற்சி முடித்த பெண் காவலர்கள் வி.பஞ்சவர்ணம், ஆர்.சத்யா ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, ‘அதிக சுமை யாருக்கு?- வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே, வீட்டில் உள்ள பெண்களுக்கே’ என்ற தலைப்பில் கவிஞர் லால்குடி ஜோதியை நடுவராகக்கொண்டு, பேராசிரியர் ஜோதிலட்சுமி, ஆசிரியர் அன்னலட்சுமி ஆகியோர் பங்கேற்ற நகைச்சுவைப் பேச்சரங்கம் நடைபெற்றது.

கரூர் சைக்கோ அறக்கட்டளை யின் ‘குட்டீஸ் ராஜ்ஜியம்’கலைக் குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் நிகழ்ச்சியின் இடையிடையே நடை பெற்றன. பிற்பகல் அமர்வில், விழாவில் பங்கேற்ற வாசகிகளுக்கான கோலப் போட்டி, வசனமில்லா நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று, விழாவின் இடையிடையே பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை அமர்வை பேராசிரியர் ஜெயலட்சுமியும், பிற்பகல் அமர்வை சின்னத்திரை நடிகை தேவி கிருபாவும் தொகுத்து வழங்கினர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் லலிதா ஜூவல்லரி, சென்னை சில்க்ஸ், கரூர் எச் டு எச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், திருச்சி ராசி புராடெக்ட்ஸ், ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல், பொன்மணி வெட்கிரைண்டர்ஸ், திருச்சி ஈட்-ரைட், தமிழ்நாடு பனானா புரொடியூசர் கம்பெனி, தஞ்சாவூர் ஃபார்ம் புராடெக்ட்ஸ், சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹோட்டல் ரம்யாஸ் பிரைவேட் லிட்., ஜெஃப்ரானிக்ஸ், மதி இந்திராகாந்தி கல்லூரி, ஈரோடு ப்ரெசிசன் பார்ம் புரொடியூசர் கம்பெனி, குமுதம் ஆன்-லைன் ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் இதழ்

‘தி இந்து’ தமிழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் பேசும்போது, “பெண்கள் இயல்பாகவே பன்முகத் தன்மை நிறைந்தவர்கள். நிர்வாகத் திறன் மிக்கவர்கள். எனவேதான், பெண்களுக்கான இடம், பெண்களுக்கான அடையாளம் சமூகத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தே, ‘தி இந்து’ வாரந்தோறும் ‘பெண் இன்று’ என தனி இணைப்பிதழை வெளியிட்டு வருகிறது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 2 மடங்காக வளர்ந்து, புதிய வடிவில் அதிக பக்கங்களுடன் கூடிய இணைப்பாக தற்போது வெளிவருகிறது. ஆண்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இணைப்பிதழ், பெண்களுக்கான இடம், மரியாதை, கண்ணியம், சாதனை, வெளிப்பாடு, அடையாளம் என எந்த வகையிலும் குறையாமல், பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் இதழாக வெளிவருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x