Published : 22 Mar 2017 07:28 AM
Last Updated : 22 Mar 2017 07:28 AM

தடுப்பூசியால் சிறுவனுக்கு புற்றுநோய் கட்டி: அதிகாரிகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்க ஆணை

ஈரோட்டில் 6 வயது சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசியால் ரத்தக்கட்டு ஏற்பட்டு புற்றுநோயாக மாறியது குறித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை செயலாளரும் பதிலளிக்க உத்தர விட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனுக்கு அரசு செலவில் உரிய சிகிச்சை அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொமரபாளை யத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு சுசீலா(24) என்ற மனைவியும், அன்பரசு(6) என்ற மகனும் உள்ளனர். அன்பரசு பிறந்து 6 மாத குழந்தையாக இருந்தபோது அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் அவனுக்கு அம்மை தடுப்பூசியை வலது தொடையில் போட்டுள்ளனர். பின்னர் ஊசி போட்ட இடத்தில் அன்பரசுவுக்கு சிறிய ரத்தக்கட்டு உருவாகியுள்ளது. இந்த ரத்தக்கட்டு நாளடைவில் வளர்ந்து பெரியதாகியுள்ளது.

தற்போது அன்பரசுக்கு 6 வயதாகும் நிலையில் சுமார் 3 கிலோ எடையில் அந்த ரத்தக்கட்டு புற்றுநோய் கட்டியாக உருவெடுத்துள்ளது. இதுவரை அந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 லட்சத்துக்கும் மேல் செலவழித்தும் புற்றுநோய் கட்டி குணமாகவில்லை. இதனால் அவனை பள்ளியில் சேர்க்க முடியாமல் பெற்றோர் அவதியடைந்து வருவது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவனுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நல வாரிய ஆணையர் ஆகியோர் வரும் மார்ச் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பெற்றோருடன் பேசி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண் டும். அந்த சிறுவனுக்கும், பெற்றோருக் கும் தங்குமிட ஏற்பாடுகளை செய்து கொடுத்து தேவைப்பட்டால் சென்னை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்திலோ வேறு ஏதேனும் மருத்துவமனையிலோ சேர்த்து சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்பரசுக்கு 6 வயதாகும் நிலையில் சுமார் 3 கிலோ எடையில் அந்த ரத்தக்கட்டு புற்றுநோய் கட்டியாக உருவெடுத்துள்ளது. இதுவரை அந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 லட்சத்துக்கும் மேல் செலவழித்தும் புற்றுநோய் கட்டி குணமாகவில்லை.

தடுப்பூசியால் பாதிப்பில்லை: ஈரோடு ஆட்சியர் விளக்கம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சுசீலா தம்பதியரின் மகன் அன்பரசு(6). என்பவருக்கு தடுப்பூசி போடப்பட்டதால், புற்றுநோய் கட்டி ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த சிறுவனை மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்தபோது அவருக்கு, ‘விங்ஸ்சார் கோமா’ என்ற புற்றுநோய் இருப்பது அடையாறு புற்றுநோய் மையம் வழங்கிய பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. இந்நோய் கால், தொடை மற்றும் எலும்பில் வரக்கூடியதாகும். இதற்காக சிறுவன் அன்பரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்துள்ளார்.

ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதத்தில் மட்டுமே குழந்தைகளுக்கு தொடையில் தடுப்பூசி போடப்படும். பின், 9 மாதம் மற்றும் ஒன்றரை ஆண்டில் கையில் தடுப்பூசி போடப்படும். மற்ற காலங்களில் தொடையில் தடுப்பூசி போடுவதில்லை.

சிறுவன் அன்பரசுக்கு 2 வயதில் தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, கட்டி ஏற்பட்டுள்ளது. எனவே அச்சிறுவனுக்கு தடுப்பூசி யால் புற்றுநோய் ஏற்படவில்லை. தடுப்பூசியால் எவ்வகையான பாதிப்பும் ஏற்படாது. யாரும் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் கூறும்போது, “சிறுவன் அன்பரசு அடையாறு புற்றுநோய் மையத் தில் சிகிச்சை பெற்ற போது, நோய் பாதிப்பு காரணமாக அவரது காலை எடுக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சிகிச்சையை பாதியிலேயே அவரது பெற்றோர் கைவிட்டுள்ளனர். இதன் காரண மாக அவருக்கு பாதிப்பு அதிகரித் துள்ளது. தற்போது, அதே இடத்தில் மட்டும் புற்றுநோய் தாக்கம் உள்ளதா அல்லது வேறு உறுப்புகளுக்கு பரவிவிட்டதா என்பது முழு ஆய்வுக்குப்பின் தான் தெரியவரும். அவருக்கு முழுமையான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x