Published : 01 Aug 2015 10:23 AM
Last Updated : 01 Aug 2015 10:23 AM

தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேர் பதவியை பறித்து நடவடிக்கை

காங்கிரஸ் கட்சியில் தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 6 பேர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தொட்டியம் இ.எம்.சரவணன் (திருச்சி வடக்கு), ஏ.வி.எஸ்.இளங்கோவன் (தருமபுரி), ஜி.ஜெயபிரகாஷ் (சேலம் மாநகர்), எஸ்.கே.செல்வராஜ் (சேலம் கிழக்கு), பி.கோபால் (சேலம் மேற்கு), ஆர்.மதனகோபால் (பெரம்பலூர்) ஆகியோர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்குப் பதிலாக என்.ஜெயப்பிரகாஷ் (திருச்சி வடக்கு) கே.ராஜாராம் வர்மா (தருமபுரி), எஸ்.பி.மேகநாதன் (சேலம் மாநகர்), எம்.பெரியசாமி (சேலம் கிழக்கு), ஏ.என்.முருகன் (சேலம் மேற்கு), டி.தமிழ்செல்வன் (பெரம் பலூர்) ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

நீக்கப்பட்ட 6 பேரும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான கே.வீ.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்டத் தலைவர்கள் மூவரும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மோகன் குமாரமங்கலத்தின் ஆதரவாளர்கள் என்றும், மற்றவர்கள் இளங்கோவன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இளங்கோவன் ஆதரவு மாநில நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஜூலை 23-ம் தேதி திருச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக் கூட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் கூட்டத்தை திரட்ட ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டத் தலைவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் திருச்சி வடக்கு, சேலம், பெரம்பலூர், தருமபுரி மாவட்டத் தலைவர்கள், செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டி முறையாக எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்தன.

அதனைத் தொடர்ந்து மேலிடத்தின் அனுமதியைப் பெற்று 6 மாவட்டத் தலைவர்களையும் நீக்கியுள்ளார். ராகுல் காந்தி கூட்டத்துக்கு தொண்டர்கள் வரத் தயாராக இருந்தும் மாவட்டத் தலைவர்கள் அதற்கான ஏற்பாடு செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x