தக்காளிக்கு மாற்றாகுமா மரத்தக்காளி?

Published : 20 Jul 2017 08:05 IST
Updated : 20 Jul 2017 12:15 IST

தமிழகத்தில் தற்போது தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கும்நிலையில், மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும் மரத்தக்காளி கிலோ 10 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்கிறது. அதனால், தக்காளிக்கு மாற்றாக மரத்தக் காளியை பயிரிட தோட்டக் கலைத் துறை மலைப்பிரதேச விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது தக்காளி விற்கிற விலை நடுத்தர, ஏழை மக்கள் குறிப்பாக பெண்களை அதிகம் பாதித்துள்ளது. ஆனால், தோட்டக் கலைத்துறை அதிகாரிகளோ, ‘‘தக்காளியின் இந்த விலை உயர்வு தற்காலிகமானதே, வறட்சி யால் விலை உயர்ந்துள்ளது. மழைபெய்து உற்பத்தி அதிகமானால் விலை குறைந்துவிடும்’’ என தெரிவிக்கின்றனர்.

சந்தைகளில் நிச்சயமற்ற விலையால், சில சமயங்களில் வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் தக்காளிகளை சாலை யில் கொட்டுவதும், செடிகளில் தக்காளியை பறிக்காமல் விட்டுவிடுவதும் நடைபெறும். சில நேரம், உச்ச விலையால் நடுத்தர, ஏழைகளுக்கு தக்காளி எட்டாக் கனியாகிவிடுவதும் தொடர்கிறது.

இந்நிலையில் தக்காளி விலை உயர்வை சமாளிக்க தற்போது மலைப்பிரதேசங்களில் தக்காளிக்கு மாற்றாக அன்றாட சமையலில் மக்கள் மரத்தக்காளியைப் (Tamarillo) பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கும் நிலையில் இந்த மரத்தக்காளி கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தக்காளியைப் போன்று இதன் சுவை இருக்கிறது. தொடர்ந்து 5, 6 ஆண்டுகள் மகசூல் கிடைக்கும். இது மரத்தில் விளையக்கூடியது. ஒரே மரத்தில் 15 முதல் 20 கிலோ மரத்தக்காளியை எடுக்கலாம். சிறுமலை, கொடைக்கானல், ஊட்டி, தாண்டிக்குடி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் விவசாயிகள் அதிகளவு மரத்தக்காளியை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சித்திக் கூறும்போது, ‘மரத்தக்காளி (டமரில்லோ) தக்காளி குடும்பத்தை சேர்ந்த சிறு மரப்பயிர். பெரு நாட்டின் மலைக் கிராமங்களில் இருந்து தோன்றிய இப்பயிர் நியூசிலாந்து, பிரேசில், இந்தியா, இலங்கை நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், நாகாலாந்து, இமாசலப்பிரதேச மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன.

இப்பயிர் தற்போது கடல் மட்டத்தில் இருந்து 1,000 முதல் 7,500 அடி உயரமான இடங்களில் வளர்கிறது. சாதாரண தக்காளி, செடியில் இருந்து பறித்த ஒரிரு நாளில் அழுகிவிடுகின்றன. ஆனால், மரத்தக்காளி பழங்கள் 7 முதல் 8 நாட்கள் வரை சாதாரணமாக கெடுவதில்லை. குறைந்த சீதோஷ்ண நிலையில் சுமார் 15 நாட்கள் வரை கெடுவதோடு சுருங்குவதோ இல்லை.

புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து உள்ளிட்ட தக்காளியில் இருக்கும் எல்லா சத்துக்களும் மரத்தக்காளியிலும் உள்ளன. அதிக மருத்துவ குணமிக்க இப்பழங்கள் தக்காளியின் குண நலங்களை பெற்றவை. ஒரு மரத்தில் இருந்து 20 கிலோ வரை இந்த வகை தக்காளி கிடைக்கிறது.

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்ப்பதால் வேண்டும்போது அறுவடை செய்துகொள்ளலாம். தக்காளிக்கு மாற்றாக இந்த பயிரை மலைப்பிரதேசங்களில் சாகுபடி செய்ய விவசாயிகளை தோட்டக்கலைத்துறை ஊக்குவித்தால் நடுத்தர, ஏழை மக்கள் தக்காளிக்கு மாற்றாக இந்த பழங்களை பயன்படுத்தலாம். இதுவும் தக்காளி போன்றே இருக்கும். அதன் சுவையும் அப்படியே இருக்கும்’ என்றார்.

மலைப்பிரதேசங்களில் மட்டும் விளையும்

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பூபதி கூறும்போது, ‘தக்காளியைப் போல் இதை அப்படியே பயன்படுத்த முடியாது. தோலை சுற்றி கசக்கும் தன்மை இருக்கும். அதனால் தோலை நீக்கிவிட்டு, பயன்படுத்தலாம். ஆனால், இது மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும். சமவெளிப் பகுதிகளில் பயிரிட முடியாது. தக்காளி அப்படியில்லை. எல்லா பகுதிகளிலும் பயிரிடக்கூடிய பயிர். தக்காளிக்கு மாற்றாக இதை பரிந்துரைக்க வாய்ப்புகள் மிக குறைவுதான்’ என்றார்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor