Published : 05 Dec 2015 10:29 AM
Last Updated : 05 Dec 2015 10:29 AM

டிச.5 செய்திப் பதிவுகள்: வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள், நிவாரண உதவிகளின் அண்மைத் தகவல்கள்

தமிழகத்தில் 16,547 பேர் மீட்பு; காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்துள்ளது; பணிகள் தீவிரம்



*

இதுவரை எந்த மாநிலங்களுக்கும் இல்லாத வகையில் தமிழகத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 மீட்புக் குழுக்கள் இறக்கி விடப்பட்டுள்ளன. இவர்கள் வெள்ளத்தில் இருந்து இன்று மாலை வரை 16,547 பேரை மீட்டுள்ளனர். >தமிழகத்தில் 16,547 பேரை வெள்ளத்தில் இருந்து மீட்டது என்டிஆர்எப்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது சற்றே வலு குறைந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இருதினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழுமையான செய்தி: >காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரசும், தனியார் அமைப்புகளும், தனி நபர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.

தமிழக மழை வெள்ளத்துக்கு பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகையும் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். >'தமிழக மழை உயிர் சேதங்கள்': பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆந்திர, கேரளா பஸ்கள் இலவச சேவை அளிப்பதாக அம்மாநில அரசுகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. >ஆந்திர, கேரளா பஸ்கள் சனிக்கிழமை இலவச சேவை: மாநில போக்குவரத்துக் கழகங்கள் அறிவிப்பு

சென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். >துப்புரவுப் பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1000 பணியாளர்கள் சென்னைக்கு வரவழைப்பு

4.50 PM: செம்பரம்பாக்கம் ஏரி உடையப்போவதாக பொதுமக்கள் மத்தியில் சிலர் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முழுமையான செய்தி: >செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது: அரசு தகவல்

2.50 PM: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. > |நிவாரணப் பணிகளில் இடையூறு செய்பவர்கள் மீது புகார் செய்யலாம்: அதிமுக அறிவிப்பு|

2.10 PM: சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய தலைவர் சாய்குமார் தெரிவித்துள்ளார்.

1.22 PM: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது கன்னியாகுமரிக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களிலும், தெற்கு உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1.00 PM: சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவுப் பணிகளை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து கூடுதலாக 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் 52 குப்பை லாரிகள் வரவழைக்கப்பட்டு துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.



12.35 PM: கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்ததால் முடங்கியிருந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி:

1. ரயில் எண் 02635 சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான சிறப்பு ரயில் பிற்பகல் 3.45 மணியளவில் புறப்படுகிறது.

2. ரயில் எண் 02605 சென்னை எழும்பூர் - திருச்சி இடையேயான சிறப்பு ரயில் பகல் 2.00 மணியளவில் புறப்படுகிறது.

3. ரயில் எண் 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயான சிறப்பு ரயில் இரவு 8.15 மணியளவில் புறப்படுகிறது.

4. ரயில் எண் 06105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையேயான சிறப்பு ரயில் மாலை 4.40 மணியளவில் புறப்படுகிறது.

5. சென்னை எழும்பூர் - புதுடெல்லி சிறப்பு ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்படும்.

6. ரயில் எண் 06175/06185 சென்னை எழும்பூர் - காரைக்கால் இடையேயான சிறப்பு ரயில் இரவு 11.15 மணிக்கு புறப்படும்.

12.25 PM: கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுதும் நீரால் சூழ்ந்திருந்தது. ஆனால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் சனிக்கிழமையான இன்று பகுதியளவு விமான போக்குவரத்து தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

12.10 PM: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 400 பெட்ரோல் நிலையங்களில் 100 நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12.00 PM: வட சென்னையில் வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், புளியந்தோப்பு, சத்யவாணி முத்து நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் போதிய நிவாரண உதவியில்லாமல் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். பால், குடிதண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

11.40 AM: அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 59 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

11.35 AM: புதுச்சேரியில் 8955 ஹெக்டேர் பரப்பளவிலான விளை நிலங்கள் சேதம். 11,418 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

11.00 AM: தென் மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் ஆர்வலர்கள் அதனை உடனடியாக கடலூரில் சரியான இடத்தில் சேர்க்க இந்த செய்தி வழிகாட்டும். >|கடலூருக்கு நிவாரணப் பொருட்களை விரைந்து சேர்ப்பது எப்படி?|

10.36 AM: சென்னையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கித் தவிப்போருக்கு உதவிட கேரள சிறைத் துறை சப்பாத்தி, ஜாம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக திருவனந்தபுரம் பூஜாபுரா சிறையில் 50,000 சப்பாத்திகள், ஜாம் ஆகியவை கைதிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை விமானப் படை விமானம் மூலமாக சென்னைக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்படஉள்ளது. சிறை ஊழியர்கள் 35 பேரின் நேரடி கண்காணிப்பில் 60 கைதிகள் சப்பாத்திகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

10.20 AM: சென்னை அண்ணா சாலையில் கனமழையால் வெள்ளநீர் புகுந்த சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10.15 AM: சென்னையில் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களின் வசதிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கட்டணம் வசூலிக்காமல் பேருந்து இயக்கப்படுகிறது.

10.00 AM: முக்கிய சாலைகளில் போக்குவரத்து தொடங்கியது: வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உட்பட முக்கிய சாலைகளில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. சென்ட்ரல், பிராட்வே, தியாகராயநகர், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், கீழ்கட்டளை, சைதை, அடையாறு, வேளச்சேரி, கோட்டூர்புரம், அயனாவரம், வடபழனி, பெசன்ட்நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள் அளவுக்கு இயக்கப்படுகின்றன.

9.50 AM: சென்னை உள்ளிட்ட வட கோடி மாவட்டங்களுக்கு கனமழை ஆபத்து நீங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x