Published : 20 Sep 2015 06:29 PM
Last Updated : 20 Sep 2015 06:29 PM

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம்: சிபிஐ விசாரணைக்கு கட்சிகள் வலியுறுத்தல்

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தக் கோரிக்கைக்காக சென்னையில் இம்மாதம் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி:

விஷ்ணுபிரியாவின் தந்தையும், மற்றவர்களும் இந்த வழக்கு குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் அலட்சியப்படுத்தப்படக் கூடியவை அல்ல. இந்த ஆட்சியிலே அதிகாரிகள் தற்கொலைகளும், அதிலே உண்மைச் சம்பவங்களை மனசாட்சி சிறிதுமின்றி மறைக்கின்ற முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. யாரும் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, அதிமுக அரசு அவசர அவசரமாக சிபிசிஐடி விசாரணை என்று அறிவித்திருப்பதில் இருந்தே, இந்த வழக்கில் உண்மைச் சம்பவங்களை மறைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறதோ என்றுதான் சந்தேதிக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். பெண்களை பல்வேறு கொடுமைகளில் இருந்து பாதுகாக்கத் தவறிய தமிழக காவல் துறை, தற்போது தனது துறையிலுள்ள பெண் அதிகாரிகளைக்கூட பாதுகாக்க முடியவில்லை. இது கொலையா அல்லது தற்கொலையா, இதன் பின்னணியிலே உயர் போலீஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் இருக்கிறார்களா என பரவலாக எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் பற்றி குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் உண்மையை நாட்டுக்குத் தெரிவித்திட சென்னை உயர் நீதிமன்றம் இந்த விசாரணையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம், இந்தியாவிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது. வீட்டு வசதித் துறை உதவிப் பொறியாளர் பழனிச்சாமி, வேளாண்துறை உதவிச் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, நியாய விலைக்கடையில் பணியாற்றிய இளங்கோவன் என பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரு பெண் முதல்வராக இருக்கும் நிலையில், அவரது துறையின்கீழ் நேரடி கண்காணிப்பில் பணியாற்றும் பெண் டிஎஸ்பி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தையின் கோரிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு அதிமுக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்:

தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதியதாகக் கூறப்படுகிற 7 பக்க கடிதத்தில் தமது மன உளைச்சலை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இக்கடிதத்தை அவர்தான் எழுதினாரா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை, முதலில் தற்கொலை வழக்காகத் தான் காவல்துறை பதிவு செய்தது. பிறகு கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால் காதல் விவகாரம் சம்பந்தப்பட்ட கொலை வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே குற்றவாளிகளை பாதுகாக்க காவல்துறை செயல்பட்டு வந்ததற்கு எதிராக இருந்த காரணத்தினால் தான் இன்றைக்கு விஷ்ணுபிரியா தற்கொலை நிகழந்திருக்கிறது. விஷ்ணுபிரியாவின் மரணம் மர்மம் நிறைந்தது.

இன்றைக்கு ஒரு கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க முயன்ற டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை தற்கொலை குறித்து ஆறுதலாக ஒரு வார்த்தை கூட தெரிவிக்க ஜெயலலிதாவின் மனம் இடம் தரவில்லை. இந்த சூழ்நிலையில் சிபிசிஐடி விசாரித்தால் நியாயமும் கிடைக்காது. நீதியும் கிடைக்காது. எனவே, டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காவல்துறை பொறுப்பை வகிக்கிற முதலமைச்சர் ஜெயலலிதா பதவி விலகி, நியாயமான விசாரணை நடைபெற ஒத்துழைக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணையில் நியாயம் கிடைக்காது என்பதால் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் 23-ம் தேதி தமிழக காங்கிரஸ் எஸ்சி துறைத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

விஷ்ணுபிரியா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தனது தற்கொலைக்கும், கோகுல்ராஜ் வழக்கு விசாரணைக்கும் தொடர்பில்லை என எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொள்பவர் இவ்வாறு எழுதி வைப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன? அவரது மர்மமான மரணம் குறித்து உண்மை நிலை கண்டறிய இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:

காவல் அதிகாரி மகேஸ்வரியின் கருத்து காவல்துறையில் நிலவும் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான உயரதிகாரிகளின் போக்குகளை வெளிப்படுத்துகிறது. அத்துடன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் விஷ்ணுப்ரியாவால் சுதந்திரமாகச் செயல்பட இயலவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. கோகுல்ராஜ் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஏதுவாக, அவ்வழக்கையும் சி.பி.ஐ. விசாரணைக்குட்படுத்துவதே சரியானதாகும். விஷ்ணுப்ரியா மரணத்துக்க்கு காவல்துறையில் நிலவும் பெண்களுக்கு எதிரான உயரதிகாரிகளின் ஆதிக்கப் போக்கும் இதற்குக் காரணம் என்பதை மகேஸ்வரிவின் குமுறலிலிருந்து தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தற்போது காவல்துறையில் நிலவும் அவலங்களை வெளிப்படையாக, துணிச்சலாகக் கூறியிருக்கிற மகேஸ்வரிக்கு உயர் அதிகாரிகளால் எந்தப் பாதிப்பும் நேராத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

ஏற்கனவே, வேளாண்மைத் துறையில் பணியாற்றிய அதிகாரி முத்துக்குமாரசாமி ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது விஷ்ணுப்ரியா உயிரிழந்திருக்கிறார். தமிழகத்தில் அதிகாரிகளுக்கு போதிய சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லை என்பதை இவர்களின் சாவுகளிலிருந்து அறிய முடிகிறது. விஷ்ணுப்ரியா சாவிலும் அரசியல் அழுத்தங்கள் அல்லது நிர்ப்பந்தங்கள் ஏதேனும் உண்டா என்பதை கண்டறிய வேண்டும். எனவே, கோகுல்ராஜ் கொலைவழக்கு மற்றும் விஷ்ணுப்ரியா மரணம் ஆகியவற்றை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும், காவல்துறையில் பெண்காவலர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் இழைக்கப்படும் இன்னல்கள் குறித்து ஆராயும் வகையில் நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன்:

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பாகும். இதன்மூலம் நேர்மையான அதிகாரிகளுக்கு நிகழும் அநீதி வெளிவராது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை வைத்து இதற்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட அரசு அதிகாரிகளின் மரணங்கள் மீது நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். விஷ்ணுபிரியாவின் தோழி கீழக்கரை டிஎஸ்பியாக பணியாற்றி வரும் மகேஸ்வரிக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x