Published : 20 Sep 2015 03:06 PM
Last Updated : 20 Sep 2015 03:06 PM

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: ஜெயலலிதா பொறுப்பேற்க விஜயகாந்த் வலியுறுத்தல்

திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம், இந்தியாவிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது. ஏழை, எளிய மக்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் எனப்பலரும் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் வீட்டு வசதித்துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி, வேளாண்மைத்துறையில் உதவிச் செயற்பொறியாளராக பணியாற்றிய திருநெல்வேலியை சேர்ந்த முத்துக்குமாரசாமி, உணவு வழங்கல்துறையின் நியாய விலைக்கடையில் பணியாற்றிய, சென்னை, வண்ணாரபேட்டையை சேர்ந்த இளங்கோவன் எனப் பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது தமிழக காவல்துறையில் பெண் அதிகாரியாக பணியாற்றிய, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளர் (DSP) விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இச்சம்பவம் காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பணிக்கு வந்து ஏழு மாதமேயான நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஒரு உயிரை காப்பாற்றவேண்டிய பொறுப்பும், கடமையும் கொண்ட காவல்துறையின் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றால் அதற்கு காரணம் என்ன?

காவல்துறையின் உயர் அதிகாரிகளால் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா? அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளாரா? அல்லது யாரேனும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனரா? இல்லை எந்த நிர்ப்பந்தம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக்கொண்டார் இது குறித்த உண்மையை தமிழக மக்களுக்கு அதிமுக அரசு தெரியப்படுத்தவேண்டும்.

தற்கொலை செய்துகொண்டவர் பத்து பக்கம் கொண்ட கடிதம் எழுதிவைத்துள்ளார் என்றும், அந்த கடிதத்தில் காவல்துறை பணியை தவறாக தேர்ந்தெடுத்துவிட்டேன், பயங்கரமான நெருக்கடிகளால் ஏற்படும் மனஉளைச்சல்களை தாங்கமுடியவில்லை என எழுதி வைத்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் அவருக்கு குடும்ப பிரச்சனை ஏதுமில்லை என்றும், துறை ரீதியாக உயர் அதிகாரிகளால் அவருக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு, மன உளைச்சலால்தான் இது நடந்துள்ளதென்றும், அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தை முழுமையாக தனக்கு காட்டவில்லை என்றும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது தந்தை குற்றம்சாட்டி, அதில் உள்ள உண்மைகள் வெளிவர சிபிஐ விசாரணை நடத்தவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி கூறும்போது அவருடன் இணைந்து பயிற்சி பெற்று டிஎஸ்பியான விஷ்ணுபிரியா தற்போது இறந்துவிட்டார் என்றும், ஒருவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், மற்றொருவர் வேறு பணிக்காக குரூப் 2 தேர்வு எழுதியுள்ளதாகவும் இதற்கெல்லாம் உயர் அதிகாரிகளின் டார்ச்சரும் அதனால் ஏற்படும் மன உளைச்சலும்தான் காரணம் என்றும் அதை தானும் தற்போது சந்தித்து வருவதாகவும், தன்னைப்போல் பலரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் காவல் துறையின் உயர் அதிகாரிகள்மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு பெண் முதல்வராக இருக்கும் நிலையில், அவரது துறையின்கீழ் நேரடி கண்காணிப்பில் பணியாற்றும், பெண் துணைக்கண்காணிப்பாளர் தற்கொலை செய்துகொண்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நான், நான் என்று சொல்லும் ஜெயலலிதா அவர்கள், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அடுத்தவர் மீது பழியைப் போட்டுவிட்டு, தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல ஒதுங்கிக்கொள்ளக்கூடாது.

காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பெண்களின் உரிமை குறித்த மகாத்மா காந்தியின் கனவும், மகாகவி பாரதியின் பாட்டும், தந்தை பெரியாரின் சீர்திருத்தமும் தமிழகத்தில் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே பெண் காவல்துறை அதிகாரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறும் அவரது தந்தையின் கோரிக்கையை ஏற்று, நேர்மையான விசாரணை நடத்திட, சிபிஐ விசாரணைக்கு அதிமுக அரசு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x