Published : 07 Dec 2016 01:27 PM
Last Updated : 07 Dec 2016 01:27 PM

ஜெயலலிதா மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் சோ- முதல்வர் ஓபிஎஸ் புகழஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தவர் சோ ராமசாமி என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோவின் மறைவு குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''துக்ளக் பத்திரிகை நிறுவன ஆசிரியரும், புகழ்பெற்ற அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவினால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

பத்திரிகை ஆசிரியர், திரைப்பட கதையாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்கறிஞர் என்ற பன்முகத் திறன் கொண்ட சோ ராமசாமி , திரைப்பட கதையாசிரியராகவும், திரைப்பட இயக்குநராகவும், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.

சோ ராமசாமி அரசியல் சார்ந்த நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். சோ ராமசாமியின் அரசியல் நையாண்டித்தனம் கொண்ட 'முகமது பின் துக்ளக்' நாடகம் மற்றும் திரைப்படம் இதற்கு சிறந்த சான்றாகும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா தன் 60-வது பிறந்த தினத்தின் போது சோ ராமசாமியின் வீட்டிற்கே சென்று ஆசி பெற்றார். மேலும் 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற போது சோ ராமசாமியின் இல்லம் சென்று அவரது நல்வாழ்த்துகளைப் பெற்றார்.

சோ ராமசாமி மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார். சோ ராமசாமி தனது பத்திரிகை பணிக்காக வீரகேசரி விருது, கோயங்கா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சோ ராமசாமியின் மறைவு பத்திரிகைத் துறைக்கு மட்டுமின்றி திரைப்படம் மற்றும் நாடகத் துறைக்கும் பேரிழப்பாகும்.

சோ ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x