Published : 07 Dec 2016 01:20 PM
Last Updated : 07 Dec 2016 01:20 PM

ஜெயலலிதா மறைவு தெரியாமலேயே சோ காலமானார்

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான 'சோ' ராமசாமி, தன் நண்பரான ஜெயலலிதா மறைந்த செய்தியை அறியாமலேயே காலமானார் என்று சோவுக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி புதன்கிழமை காலமானார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து தெரியாமலேயே சோவின் உயிர் பிரிந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரித்தபோது, ''கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 'சோ', சுவாசக் கோளாறு காரணமாக ஒரு சில முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சுவாசப் பிரச்சினையினாலும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதாலும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனையிலேயே அவரும் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் நண்பர் ஜெயலலிதா உயிருக்குப் போராடும் தகவலறிந்ததால் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் சோ, ஐ.சி.யூ.வுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிர் பிரிந்ததே இறுதி வரை சோவுக்கு தெரியாது'' என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

'சோ'- ஜெயலலிதா நட்பு பின்னணி

'சோ' ராமசாமி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பதோடு, அவரின் சிறந்த ஆலோசகராகவும் இருந்தவர்.

நாடகத்துறையில் தொடங்கிய அவர்களின் நட்பு, ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதல்வரான பிறகும் நீடித்தது.

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட அந்த காலகட்டத்தில், 'சோ'தான் அருகிலிருந்து ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x