Published : 07 Dec 2016 08:24 AM
Last Updated : 07 Dec 2016 08:24 AM

ஜெயலலிதா மறைவு: இறுதி அஞ்சலி, ஊர்வல துளிகள்

* ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காலை 6.15 முதலே ராஜாஜி அரங்கம் முன் மக்கள் குவியத் தொடங்கினர். வெளியூரிலிருந்து வந்த நபர்களின் எண்ணிக்கை காலை 10 மணிக்கு மேல் அதிகமானதால் அண்ணா சாலை ஸ்தம்பித்தது.

* இறுதி அஞ்சலியை பொதுமக்கள் காண்பதற்காக அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு வெளியிலும், அரங்கத்தின் வலதுபுறமும் பெரிய டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் சாலையில் நின்றபடியே இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை பார்த்தனர்.

* ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது முதல் மாலையில் இறுதி ஊர்வலம் தொடங்கும் வரை அவரது உடலுக்கு அருகிலேயே சசிகலா நின்றுகொண்டிருந்தார்.

* காலை 11 மணிக்கு அஞ்சலி செலுத்த வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சதீஷூம் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அஞ்சலி செலுத்த வந்த திமுக எம்பி கனிமொழி, சசிகலாவிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் கனிமொழியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

* மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி, ராஜாஜி அரங்கம் வந்தடைந்தார். முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய பின் சசிகலாவுக்கு ஆறுதல் கூறிய மோடி, பின்னர், மக்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டவாரே 1.35 மணிக்கு ராஜாஜி அரங்கத்திலிருந்து புறப்பட்டார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடன் வந்து அவரை வழியனுப்பி வைத்தார்.

* அஞ்சலி செலுத்த ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். சில சமயங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தினர்.

* முதல்வரின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஆளுநர் சதாசிவம் ஆகிய மூவரும் ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

* இறுதி ஊர்வலத்தின்போது பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக துணைராணுவ படையினர் களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் ஜெயலலிதாவின் உடலை எடுத்துச் செல்ல வழி ஏற்படுத்தினர்.

* மாலை 4.17 மணியளவில் ஜெயலலிதாவின் உடல், கண்ணாடி பேழையில் வைத்து மூடப்பட்டு முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் முன்னதாக சென்று, ராணுவ வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். சசிகலா கண் கலங்கிய நிலையில், கண்களை துடைத்துக்கொண்டே சென்றார்.

* முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை காண வந்த பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் இலவசமாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன

* எம்ஜிஆர் சமாதி முன்பு 3 பெரிய மின்னணு திரைகள் வைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டனர்.

* ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கம் மற்றும் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையை பார்க்க முடியும் என்பதால் வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் ரயிலில் நேற்று கூட்டம் அலைமோதியது

* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை ராஜாஜி அரங்கம் வந்த ராகுல்காந்தி, இறுதி சடங்கு முடிந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டும் வரை காத்திருந்து, அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பின்னரே புறப்பட்டு சென்றார்.

* ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தனப்பேழையில், அவரது பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x