Published : 30 Dec 2016 01:11 PM
Last Updated : 30 Dec 2016 01:11 PM

ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்: முத்தரசன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய முழு விவரங்களையும் தமிழக அரசு வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. இது தொடர்பான பொது நலவழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ''ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில் தங்களுக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் முதல்வராக பொறுப்புவகித்த அண்ணா, எம்.ஜி.ஆர் இருவரும் நோய்வாய்ப்பட்டு, மருத்துமனையில் சிகிச்சை பெற்று போது அவரது உடல் நிலை குறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டு வந்தது. அதனால் அவர்களது மரணத்தில் யாருக்கும், எந்த சந்தேகமும் எழவில்லை.

அத்தகைய நடைமுறையை தமிழக அரசு பின்பற்றாததன் காரணமாக, மாநில அரசு தனது கடமைப் பொறுப்பை நிறைவேற்ற தவறியதன் காரணமாக தற்போது முதல்வரின் மரணத்தில் மர்மங்களும், குழப்பங்களும், குளறுபடிகளும் நீடிக்கின்றன.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5 இரவு அவர் மரணம் அடைந்தார் என அறிவிக்கும் வரையிலான காலத்தில் முதல்வருக்கு ஏற்பட்டிருந்த நோய் என்ன ?. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன?. அவர் உடல் நிலையில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள், முன்னேற்றம், பின்னடைவு என அவ்வப்போதைய விபரங்கள் என்று தமிழக அரசின் சார்பில் எந்தவித அறிக்கையும் ஏன் வெளியிடப்படவில்லை.

அரசு தனது கடமைப் பொறுப்பை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியது ஏன்? ஜெ.ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மரணமடைந்த 20 மணிநேரத்தில் அடக்கம் செய்யும் போது அவரது உடல் பதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.

இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி ''இந்த வழக்கு வழக்கமான முறையில் என்னிடம் விசாரணைக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதிக்க உத்திரவிட்டிருப்பேன்'' என்று எச்சரித்துள்ளார்.

எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி முழு விபரங்களையும் தமிழக அரசு வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x