Published : 07 Dec 2016 08:25 AM
Last Updated : 07 Dec 2016 08:25 AM

ஜெயலலிதா உடல் ஆம்புலன்சில் வரும்போது அமைச்சர்கள் சுழல் விளக்கு காரில் வருவதா?

அதிமுக தொண்டர்கள் வாக்குவாதம் - போலீஸ் தடியடி

முதல்வர் ஜெயலலிதா உடல் ஆம்பு லன்சில் வரும்போது அமைச்சர்கள் சுழல் விளக்கு காரில் வருவதா? என அமைச்சர்களிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் சுழல் விளக்கு வைத்த கார்களில் போயஸ் தோட்டத்துக்கு சென்றனர். அதன் பிறகு முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்சில் போயஸ் தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனால், கோபம் அடைந்த அதிமுக தொண்டர்கள் அம்மாவின் உடலே ஆம்புலன்சில் வருகிறது. நீங்கள் மட்டும் சுழல் விளக்கு வைத்த வாகனத்தில் வருவதா? என அமைச்சர்களுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி, அமைச்சர்களின் கார்களை தட்டினர்.

இதனால், அமைச்சர்கள் போயஸ் தோட்டத்தில் இருந்து திரும்பும்போது சுழல் விளக்கை அணைத்து ஒன்றன் பின் ஒன்றாக சிறிது நேரம் இடைவெளி விட்டு அமைதியாக திரும்பினர்.

அமைச்சர் நிலோபர் கபில் மட்டும் நடந்து சென்றார். போயஸ் தோட்டத்துக்கு உள்ளே செல்ல எம்எல் ஏ-க்கள், எம்பி-க்கள் என யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு போயஸ் தோட்டம் வந்த எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் போலீ ஸாருடன் வாக்குவாதம் செய்தனர்.

அதன் பிறகு அனைத்து எம்எல்ஏ-க் களும், அமைச்சர்களும் ஊர்வலமாக வந்ததால் அவர்களையும் உள்ளே செல்ல அனுமதித்தனர். அமைச்சர் உதய குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் ஜெயலலிதா உடல் வந்த ஆம்புலன் சுக்கு பிறகு வந்த வாகனத்தில் தொங்கிக் கொண்டே வந்தனர்.

நடிகர் ராமராஜனும் கூட்டத்துடன் வந்தார். அவருக்கும் முதல்வர் வீட்டுக் குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

போயஸ் தோட்டத்தில் தடியடி

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெய லலிதா கடந்த திங்கள் இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2.25 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போயஸ் தோட்டத்தில் குவிந்தனர்.

500-க்கும் மேற்பட்ட போலீஸார் போயஸ் தோட்டத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக பின்னி சாலையில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. தனியார் வாகனங்கள் போயஸ் தோட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அமைச்சர்கள், அதிகாரிகள் முதலில் அதிகாலை 2.30 மணிக்கு சைரன் வைத்த வாகனத்தில் விளக்குகள் சுழல போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். அடுத்த 10 நிமிடங்களில் முதல்வர் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் போயஸ் தோட்டத்துக்குள் விரைந்தது. அதைத் தொடர்ந்து மேலும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தன.

ஜெயலலிதாவின் உடலைப் பார்த்து அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்ணீர் வடித்தனர். கதறி அழுதனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைக்கப்பட்ட முதல்வர் உடலை பார்க்க முண்டியடித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால், அதிமுக தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சில தொண்டர்கள் ஜெயலலிதாவின் வாகனத்தை பின் தொடர்ந்து வீட்டுக் குள் நுழைய முயன்றனர். அப்போது போலீஸார் லேசான தடியடி நடத்தி, தொண்டர்களை கலைந்து போகச் செய்தனர். அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் 3 முறை தொண்டர் களைக் கலைக்க போலீஸ் தடியடி நடந்தது. இதனால், தொண்டர்கள் சிதறி ஓடினர். மீண்டும் அங்கு குழுமிய அதிமுக தொண்டர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

அதைத் தொடர்ந்து வீட்டில் ஜெய லலிதாவின் உடலுக்கு சம்பிரதாய முறைப்படியான சடங்குகள் நடத்தப் பட்டன. பின்னர், காலை 5.47 மணிக்கு பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட பின்னர் சிவானந்தா சாலை வழியாக விஐபி-க் களும், அண்ணா சாலை பன்னோக்கு மருத்துவமனை வழியாக பொதுமக்க ளும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப் பட்டனர். பொதுமக்கள் செல்லும் வழியில் சிலர் கூட்டமாக பிறரைத் தள்ளி விட்டு சென்றனர். அவர்களை அடையா ளம் கண்ட போலீஸார் அந்த நபர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x