Published : 30 Dec 2016 10:04 AM
Last Updated : 30 Dec 2016 10:04 AM

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வீடியோ பதிவுகளை உயர் நீதிமன்றத்தில் தரவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனையின் வீடியோ பதிவுகளை உயர் நீதிமன்றத்துக்கு கொடுத்து, அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன. அவர் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, ‘ஜெயலலிதா விரும்பும்போது வீடு திரும்புவார்’ என்று மருத்துவமனை செய்தி வெளியிட்டது. ஆனால், அவர்கள் கூறியதற்கு மாறாக டிசம்பர் 5-ம் தேதி அவர் திடீர் மரணம் அடைந்தார் என்ற செய்தி வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வருவதற்காக அதிமுகவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை, மத்திய, மாநில அரசுகள், பிரதமர் அலுவலகம் ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது.

மருத்துவமனையில் ஜெய லலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, மரணம் அடைந்தது வரை அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்காததன் விளைவால்தான், இந்த சந்தேகம் எழுகிறது. எனவே, மருத்துவமனையில் உள்ள வீடியோ பதிவுகளை உயர் நீதி மன்றத்துக்கு கொடுத்து, அங்கு நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x