Published : 23 May 2015 12:22 PM
Last Updated : 23 May 2015 12:22 PM

ஜெயலலிதாவுக்காக அரங்கேறிய அத்துமீறல்களால் பொதுமக்கள் பாதிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக, சென்னையில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் முதல்வராக 5-ஆவது முறையாக ஜெயலலிதா பதவியேற்பதற்கான முன்னேற்பாடுகளே சென்னை மாநகர மக்களுக்கு பெரும் அவதியையும், தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் வெறுப்பையும் சலிப்பையும் கொடுத்திருக்கின்றன.

தொடக்கமே இப்படி என்றால் அடுத்த ஓராண்டில் இன்னும் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ள வேண்டுமோ? என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊழல் வழக்கிலிருந்து பிழையானத் தீர்ப்பால் விடுதலையான ஜெயலலிதா இன்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதற்கு முன் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்காக நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஜெயலலிதா மேற்கொண்ட நகர்வலம் ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தமிழக வரலாற்றின் இருண்ட பக்கங்களில் எழுதப்பட வேண்டியவை ஆகும்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை 7.00 மணிக்குத் தொடங்கி 7.05 மணிக்கு முடிவடைந்து விட்ட போதிலும், பிற்பகல் 1.28 மணிக்கு நல்ல நேரம் பார்த்து போயஸ் தோட்டத்திலிருந்து வெளியே வந்த ஜெயலலிதாவுக்காக காலை 11.00 மணியிருந்தே மாநகரின் முக்கியச் சாலைகள் மூடப்பட்டு விட்டன.

சென்னை அண்ணா சாலை, நந்தனம் சேமியர்ஸ் சாலை, கோட்டூர்புரம் சாலை, இராதாகிருட்டிணன் சாலை என ஜெயலலிதா வலம் வந்த சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சாலைகளில் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு சாலைகளில் திருப்பிவிடப் பட்டதால் 110 டிகிரி கோடை வெயிலில் சிக்கி சென்னை மாநகர மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

சாலைகளில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் காத்துக் கிடந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். அரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவைச் சென்றடைய 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இரவு 8 மணி வாக்கில் தான் சீரடைந்தது.

இந்நெரிசலில் பல அவசர ஊர்திகளும் சிக்கிக் கொண்டன. இதனால் நோயாளிகள் சொல்ல முடியாத பாதிப்புக்கு உள்ளானார்கள். நடைபாதைகளை ஆக்கிரமித்து வரவேற்பு விளம்பரங்களும், சாலைகளை அடைத்து மேடைகளும் வைக்கப்பட்டதால் மக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டது. அண்ணாசாலையில் அமைச்சர் ரமணா அமைத்திருந்த மிகப் பெரிய விளம்பரப் பதாகைக்கான சாரம் சரிந்து பேரூந்து மீது விழுந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் சரிசெய்ய காவலர்களே இல்லை என்பது தான் கொடுமை.

இன்னொருபுறம் சென்னை மாநகரிலுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக சென்று விட்டதால் குற்றங்களைத் தடுக்க ஆளில்லை. சென்னையின் பல பகுதிகளில் தங்கச் சங்கிலி, செல்பேசிகள் போன்றவற்றை வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் செய்ய சென்ற பொதுமக்களை, "வழக்குப் பதிவு செய்ய காவலர்கள் இல்லை" என்று அங்கிருந்த காவலர்களே திருப்பி அனுப்பினர். இதனால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.மொத்தத்தில் நேற்று முழுவதும் கொள்ளையர் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக நேற்று அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

1991-96 ஆட்சியில் சென்னையில் ஜெயலலிதா செல்லும் சாலைகள் மூடப்பட்ட நிகழ்வுகளும், அதற்காக அவருக்கு மக்கள் விட்ட சாபங்களும், அளித்த தண்டனைகளும் நினைவுக்கு வருகின்றன. 2011 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஜெயலலிதா சென்ற போதும் இதேபோல் தான் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதற்காக அடுத்த நாள் வருத்தம் தெரிவித்த அவர், இனி தாம் செல்லும் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்படாது என உத்தரவாதம் அளித்தார்.

ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் இப்போது மீண்டும் முதல்வராவதையொட்டி சென்னையே முடங்க வேண்டும் என நினைக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தபோது, நலத் திட்டங்கள் முடக்கப்பட்டு மக்கள் தண்டிக்கப்பட்டனர். இப்போது முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாகவே இந்த அளவுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. இதையெல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டியது விதியா... சதியா?

இத்தனைக்கும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் சந்தேகத்திற்கிடமின்றி விடுதலை செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழிகாட்டுதல்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை மீறியும், வருவாயைக் கணக்கிடுவதில் இமாலயத் தவறுகளை செய்தும் அளிக்கப்பட்டத் தீர்ப்பின் அடிப்படையில் தான் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தால் வேண்டுமானால் ஜெயலலிதா தவறுதலாக விடுதலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் 'மக்கள் முன் குற்றவாளி'யாகத்தான் நின்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து நாளை மறுநாள் கர்நாடக அரசு முடிவெடுக்கவுள்ள நிலையில், அதன்பின் பதவி ஏற்பதில் சிக்கல் வரலாம் என்பதால் தான் ஜெயலலிதா அவசர அவசரமாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இவ்வழக்கில் அடுத்தசில வாரங்களில் ஏதேனும் திருப்பம் ஏற்படலாம்; அதனால் ஜெயலலிதா மீண்டும் பதவி விலக வேண்டியிருக்கலாம் என்ற சூழ்நிலையிலேயே இந்த அளவுக்கு சர்வாதிகாரமும், அட்டகாசமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால், அனைத்து அம்சங்களும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்தால் அவருடைய செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இனி ஜெயலலிதாவின் செயல்பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும். ஏனெனில் அவர் பயணித்துக் கொண்டிருப்பது அதல பாதாளத்தை நோக்கி!" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x