Published : 03 Jul 2017 08:06 AM
Last Updated : 03 Jul 2017 08:06 AM

ஜிஎஸ்டி வரி விதிப்பு: விரைவு ரயில், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விலை உயர்வு

ஜிஎஸ்டி வரி விதிப்பால் விரைவு ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு அமலாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதில், ரயில்வே துறையில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப் பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே இருந்த சேவை வரி 4.5 சத வீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ரயிலில் ஏ.சி. மற்றும் முதல் வகுப்புகளுக்கான கட்டணம் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இதே போல், ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி உணவகங்களிலும், விரைவு ரயில்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்ந் துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘ரயிலின் ஏசி மற்றும் முதல் வகுப்பு கட்டணத்தில் ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப் பட்டுள்ளது. இதனால் அந்த வகுப்புகளுக்கான ரயில் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப் பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - டெல்லி இடையேயான கட்டணம் ஏ.சி. முதல் வகுப்பில் ரூ.25ம், ஏ.சி. இரண்டாம் வகுப்பில் ரூ.15ம், ஏ.சி. மூன்றாம் வகுப்பில் ரூ.5-ம் உயர்ந்துள்ளது.

ஏ.சி. மற்றும் விரைவு ரயில் களில் உணவு பொருட்களுக்கும், ஐஆர்சிடிசி ஏ.சி. உணவகங் களிலும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. அல்லாத உணவகங்களில் 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

முதல் ஏ.சி. பெட்டியில்

டீ ரூ.12.50 , ஜிஎஸ்டி ரூ.2.25 மற்றும் ஒப்பந்ததாரர் செலவும் சேர்த்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காலை உணவு ரூ.81.50, ஜிஎஸ்டி ரூ.14.67 மற்றும் ஒப்பந்ததாரர் செலவும் சேர்த்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் மதிய உணவு ரூ.155 (ஜிஎஸ்டி ரூ.23.31), மாலை நேர டீ ரூ.50 (ஜிஎஸ்டி ரூ.7.38), காம்போ சாப்பாடு ரூ.80 (ஜிஎஸ்டி ரூ.11.97) என வசூலிக்கப்படுகிறது.

2-ம், 3-ம் வகுப்பு ஏ.சி.

டீ ரூ.10 (ஜிஎஸ்டி ரூ.1.44), காலை உணவு ரூ.80 (ஜிஎஸ்டி ரூ.11.97), மதிய/ இரவு உணவு ரூ.135 (ஜிஎஸ்டி ரூ.20.16), மாலை டீ ரூ.40 (ஜிஎஸ்டி ரூ.7.20), காம்போ சாப்பாடு ரூ.80 (ஜிஎஸ்டி ரூ.11.97) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x