Published : 03 Jul 2017 08:02 AM
Last Updated : 03 Jul 2017 08:02 AM

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய ‘லெட்ஜர்ஸ்’ மென்பொருள்: சிறு, குறு நிறுவனங்களுக்கு பயன்படும்

சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய உதவும் வகையில் ‘லெட்ஜர்ஸ்’ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த ஜிஎஸ்டி சட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் 3 முறை கணக்குகளை வர்த்தகர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோர் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத் தப்பட்டதையடுத்து பலர் இணைய தளத்தில் இணைந்துள்ளனர்.

ஆனாலும் பல வியாபாரி களுக்கு ஜிஎஸ்டி இணைய தளத்தில் பதிவு செய்வதில் குழப்பம் இருந்து வருகிறது. மேலும் கணக்குகளை எப்படி தாக்கல் செய்வது? என்ற அச்சமும் இருக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்ய உதவும் வகையில் ‘லெட்ஜர்ஸ்’ என்ற இணையதள மென்பொருளை ‘இந்தியாஃபைலிங்ஸ்’ (indiafilings.com) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே வணிகம் மற்றும் தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு உரிமங்களை வாங்கித் தருவது, அவற்றை அந்தந்த அரசு துறைகளில் பதிவு செய்வது போன்ற சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால், கணக்குகளைத் தாக்கல் செய்ய உதவ ‘லெட்ஜர்ஸ்’ சேவையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘இந்தியாஃ பைலிங்ஸ்’ நிறுவன மேலாண்மை இயக்குநர் லயனல் சார்லஸ் கூறியதாவது:

‘லெட்ஜர்ஸ்’ இணையதள மென்பொருளில் வர்த்தகர்கள் தங்களது வரவுக்கான ஆவணங்கள், செலவுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் மென்பொருளில் சேமித்து வைக் கப்பட்டிருக்கும். பின்னர் ஜிஎஸ்டி திட்டத்தின்படி கணக்குகளைத் தாக்கல் செய்யும்போது, தானாக கணக்குகளை மென்பொருளே சரி செய்து கொள்ளும். இறுதியாக வர்த்தகர் தாக்கல் செய்வதற்கான கட்டளையை கொடுத்தால், அரசின் ஜிஎஸ்டி இணையதளத்தில் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிடும். ஜிஎஸ்டி இணையதளத்துக்கும் வர்த்தகர்களுக்கு இடையில் பாலமாக ‘லெட்ஜர்ஸ்’ செயல்படும்.

தற்போது சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான இணைய தளத்தை மத்திய அரசு வெளி யிடவில்லை. அதனால் ஜூலை மாதம் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகஸ்ட் மாதம் ஒரு முறையும், செட்பம்பர் மாதம் ஒருமுறையும் மட்டும் தாக்கல் செய்தால் போதும். அக்டோபரில் இருந்துதான் மாதம் 3 முறை என்ற விதி முழுமையாக நடைமுறைக்கு வருகிறது.

இதனால், இப்போதைக்கு நாங்களும் கணக்குகளைத் தாக்கல் செய்ய முடியாது. ஆனால் வரவு, செலவுகளைப் பதிவு செய்து வைத்து கொள்ளலாம். ஓராண்டுக்கு ‘லெட்ஜர்ஸ்’ சேவையை பயன்படுத்த ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்யாதவர்கள் கூடுதலாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தாண்டில் குறைந்தது 1 லட்சம் பேரையாவது ‘லெட்ஜர்ஸ்’ இணையதளத்தில் இணைக்க இலக்கு வைத்துள்ளோம். இப்போதைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இவ்வாறு லயனல் சார்லஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x