Published : 01 Jan 2017 08:15 PM
Last Updated : 01 Jan 2017 08:15 PM

ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் திமுகவின் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க கோரி வரும் 3-ம் தேதி அலங்காநல்லூரில் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 2011-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளைச் சேர்த்து ஓர் அறிவிக்கை வெளியிட்டது.

சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படையில் மத்திய அரசின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.

இதற்கிடையே, மத்திய பாஜக அரசு கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் பட்டியலிலிருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலிலிருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதில் பாஜக அரசு இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே வரும் ஆண்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு மத்திய பாஜக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உரிய நடவடிக்கைளை எடுக்க கூறியும் வரும் 3-ம் தேதி அலங்காநல்லூரியில் திமுக சார்பில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து பங்கேற்கும்.

காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர். ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்பார்கள். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x