Published : 18 Jan 2017 12:09 PM
Last Updated : 18 Jan 2017 12:09 PM

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்கள் நினைப்பதை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்; பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் அறப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேநேரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ அரசு முயலாதது கண்டிக்கத்தக்கது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டாவது நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் ஆசையையும், எதிர்பார்ப்பையும் தமிழக அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்காக சிறு துரும்பைக் கூட தமிழக அரசு கிள்ளிப் போடவில்லை.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறும் விஷயத்தில் தமிழக அரசு எந்த அளவுக்கு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டதோ, அதைவிட பத்து மடங்கு கூடுதல் பொறுப்பின்மையுடன் போராட்டத்திற்கு தீர்வு காணும் விஷயத்தில் நடந்து கொள்கிறது. அலங்காநல்லூரில் நேற்று முன்நாள் இளைஞர்களும், ஊர்மக்களும் போராட்டத்தைத் தொடங்கிய போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கை வாடிவாசல் வழியாக குறைந்தபட்சம் 5 காளைகளை அவிழ்த்து விட வேண்டும் என்பது தான். இதை தமிழக அரசு செயல்படுத்தியிருந்தால் தங்கள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மக்கள் போராட்டத்தை கைவிட்டிருப்பார்கள்; இயல்பு நிலை திரும்பியிருக்கும்.

ஆனால், மக்கள் சக்தியை அளவிட முடியாத தமிழக அரசு, பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் தடியடி நடத்திப் போராட்டக்காரர்களை கலைத்தது போன்று அலங்காநல்லூர் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டனர். அதன்விளைவு தான் அமைதியாக முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், சென்னை மெரினா கடற்கரை, கோவை, சேலம், தஞ்சாவூர், செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது. நேற்று தொடங்கிய போராட்டம் இரவிலும் விடிய, விடிய நடந்து இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

அதுமட்டுமின்றி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளின் மாணவர்களும் இன்று வகுப்புகளை புறக்கணித்து , போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் போராட்டம் இந்த அளவுக்கு தீவிரமடைந்த பிறகும், அதை கையாளுவதில் முதிர்ச்சியான அணுகுமுறையை கையாள அதிமுக அரசு முன்வரவில்லை.

மாறாக சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போன்ற சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையைத் தான் தமிழக ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர். அலங்காநல்லூரில் போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை தடுத்து திருப்பி அனுப்பியது, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை உதிர்த்தது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்ட காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறும் பகுதியில் மின்சாரத்தை துண்டித்திருக்கிறது. மின்சாரத்தை துண்டித்தால் போராட்டத்தை நிறுத்திவிடலாம் என்ற புத்திசாலித்தனத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

மாணவர் சக்தி எல்லையில்லா வலிமை கொண்டது. உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தவை மாணவர்களின் போராட்டங்கள் தான். 1967ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட அடித்தளம் அமைத்ததும் 1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தான்.

மாணவர் சக்தியை குறைத்து மதிப்பிட்டவர்கள் வீழ்ந்து போனதை விளக்க பல வரலாறுகள் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்தை இன்னுமொரு போராட்டமாக நினைத்து அலட்சியம் காட்ட வேண்டாம். மாணவர் சக்தியை மதித்து, அவர்களுடன் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், போராட்டப்பகுதியை கடந்து பலமுறை செல்லும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் இன்று அதிகாலை நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்து விட்டன.

இதன்பிறகும் முதல்வர் ஒதுங்கி இருக்காமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஆந்திரா, கேரளம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக இத்தகைய நெருக்கடி ஏற்பட்ட போது, அம்மாநிலங்களின் முதல்வர்கள் மக்களின் பக்கம் தான் நின்றார்களே தவிர, மக்களை ஒடுக்க முயலவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தடையை ஒதுக்கி வைத்து விட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாகும்.

எனவே, முதல்வர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறக்க இயலுமா... இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும்.

அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x