Published : 30 Jan 2017 04:55 PM
Last Updated : 30 Jan 2017 04:55 PM

ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு படிப்பினை: நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'தி இந்து' இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டி.





தமிழத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

போராட்டம் வர வேண்டிய நிலை ஜல்லிக்கட்டுக்கு ஏன் வந்தது? 2006-ல் இருந்து சின்னச்சின்னதாக சர்ச்சைகள் எழுந்தது. எங்கேயோ ஓர் இடத்தில் ஜல்லிக்கட்டுக்கான நோக்கத்தை தவறாக வழிநடத்திவிட்டோம். ஆதரவாகப் பேசினால் ஒரு நிலைப்பாடு என்றும், எதிர்த்தால் மற்றொரு நிலைப்பாடு என்றும் கூறப்படுகிறது.

முன்னதாகவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் இரண்டு அரசுகளும் முழு கவனம் எடுத்திருக்க வேண்டும். முற்றிப்போன பிறகு மக்கள் விரக்தியடைந்த நிலையில், புரட்சி வெடித்தது. பொதுமக்கள் சாலைக்கு வந்து போராட்டத்தை நடத்தினர்; நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றனர். இது இயல்பானது. ஆனால் இத்தனை தூரம் வந்திருக்கக் கூடாது.

1000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட விளையாட்டு ஜல்லிக்கட்டு. 2006-லேயே இதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது எல்லோரும் எங்கிருந்தோம்? அதை எதிர்த்து எந்தக்குரலும் என் காதில் விழவில்லையே. ஒவ்வொரு பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி ஒரு முடிவுக்கு வர முடியுமா என்று ஆலோசிக்க வேண்டும். மாநிலக் கட்சிகளும், அரசும் இதை முன்னெடுக்க வேண்டும்.

நல்லாட்சியில் என்னவெல்லாம் செய்யலாம்; செய்யக்கூடாது என்பதற்கு ஜல்லிக்கட்டு ஓர் உதாரணம்; படிப்பினை.

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டம், மத்திய அரசுக்கு மறைமுகமாகக் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்கிறார்கள். எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த மாதிரியான கருத்துக்களை எல்லாம் யார் எந்த நோக்கத்தோடு சொல்கிறார்கள் என்று எப்போதுமே யோசிப்பேன். இப்போது அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, நிரந்தரத் தீர்வை நோக்கிச் சென்றுவிட்டது. இதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை.

குற்றம் சுமத்தத் தயாராக இருப்பவர்கள் யோசித்துவிட்டுச் சுமத்த வேண்டும். 2011-ல் பேசாதவர்கள் இப்போது வாயைத் திறந்து பேசுவது ஏன்? என்னுடைய பிரதமரைப் பற்றி, நாங்கள் எந்தத் தவறும் செய்யாதபோது, ஜல்லிக்கட்டுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும்போது, கண்டபடி பேசினால் அது தவறு.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? அதற்கு உங்களின் பங்கு என்னவாக இருக்கும்?

இப்போதும் அதைச் சிலர் எதிர்க்க வாய்ப்புள்ளது. அதன் பிடி தளராமல், ஜல்லிக்கட்டை ஆதரிக்க வேண்டும். மற்றவர்கள் மீது விஷம் கக்காமல், ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். சிறு எதிர்ப்புகள் வரும்போதே சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேச வேண்டும். நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது என்றே சொல்வேன்.

பீட்டாவைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பது குறித்து?

ஜல்லிக்கட்டைப் பார்த்துவிட்டு, இந்தக்கோரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. பார்க்கலாம். தனிப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அதற்கான கொள்கைகள் என்ன என்பதையும் பார்க்க வேண்டும். எதிலுமே உடனடி எதிர்வினை இருக்கக்கூடாது. தனிப்பட்ட நபரை விமர்சிப்பது தவறு. நான் பீட்டாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசவில்லை. அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும்.

காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை எப்போது நீக்குவீர்கள்?

இந்தப் பிரச்சனை தற்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. அரசும், நீதிமன்றமும் முரண்படக்கூடாது. நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்காமல் செயல்பட வேண்டியது அரசின் கடமையும், நியாயமும் கூட. விரைவில் வரவுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து மத்திய அரசு செயல்படும்.

காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டில் நீதிமன்றத்தை மீறமுடியாது என்று கூறியுள்ளீர்கள். ஒரே நேரத்தில் எதற்கு இருவிதமான நிலைப்பாடு?

அப்படி இல்லை. காவிரிப் பிரச்சனையில் தீர்ப்பாயங்கள், அதன் தீர்ப்புகள்தான் நீதிமன்றத்தில் இருந்தது. ஏதோ ஒருவிதத்தில் மத்திய அரசு அதில் வரவேண்டியதானது. வாரியம் அமையுங்கள் என்று நீதிமன்றம் கூட சொல்லமுடியாது. அது சட்டரீதியான பணி. எனவே அந்தப் பொறுப்பு அரசிடம் உள்ளது.

கோர்ட் சொல்லிவிட்டதாலேயே இன்று மாலையே அதைச் செய்யமுடியாது. அதற்கு முன்னால் முன்வடிவுகள், வரைவுகள் தயார் செய்யப்பட வேண்டும். விவாதங்கள் நடத்தப்பட்டு, மசோதா நிறைவேற வேண்டும். இத்தனை பணிகளுக்குப் பின்னர்தானே அமைக்கமுடியும் என்று கேட்டோம். காவிரி வாரியத்தை அமைக்கச் சொல்ல வேண்டியது பாராளுமன்றமே தவிர நீதிமன்றம் அல்ல.

ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னால் எப்படி மதிப்பிட முடியும். வாக்களித்த மக்கள் அதைச் செய்வார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும் என்னால் எப்படிச் சொல்ல முடியும்?

வார்தா புயலை எதிர்கொள்வது, ஜல்லிக்கட்டு போராட்டத்தை கையாள்வது - இவற்றில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

ஏரிகள் ஆக்கிரமிப்பு ஒரு நாளில் நடந்ததல்ல. தசாப்தங்களாகத் தொடர்ந்த செயல் அது. அதை அனைவரும், குறிப்பாக மாநிலக் கட்சிகள் பொறுப்பெடுத்துச் சரியாக்க வேண்டும். ஜல்லிக்கட்டைப் பற்றி நிறையப் பேசிவிட்டோம். (சிரிக்கிறார்...)

தமிழக அரசை பா.ஜ.க. மறைமுகமாக இயக்குவதாக செய்திகள் வெளியாகின்றனவே...

ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது. இங்கிருக்கும் அரசை நாங்கள் ஏன் இயக்க வேண்டும்? இந்த முறையைப் பிரதமர் ஏற்கமாட்டார். அவரும் ஒரு காலத்தில் மாநில முதல்வராக இருந்திருக்கிறார். அப்போது மத்திய அரசு கொடுத்த அழுத்தங்களால் பாதிக்கப்பட்டது அவருக்கும் புரியும். அதனால் மாநில முதல்வராக இருந்தவருக்கு, மற்றொரு மாநிலத்தைஇயக்கும் கொள்கையில் நம்பிக்கையில்லை.

தமிழக முதல்வரால், மோடியை உடனே சந்திக்க முடிகிறது. பலமுறை முயற்சித்தும் அதிமுக எம்.பி.க்களால் அவரைச் சந்திக்கமுடியவில்லையே?

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் சார்பில் வரும் முதல்வரைச் சந்திக்கவில்லை என்றால் அரசியலமைப்புப்படி தவறு என்பீர்கள். பாராளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்கள், அங்கேயே மோடியைச் சந்திக்கலாமே? சரி சில சமயங்களில் சந்திக்க முடியாமல் போகிறது.

முதலமைச்சரும், எம்.பி.க்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே. என்ன குற்றம் சொல்கிறீர்கள்? முதல்வரைப் பார்க்காமல் எம்.பி.க்களைப் பார்க்க வேண்டுமா? எனக்குப் புரியவில்லை. முடிந்தால் இவர்களையும் பார்த்திருப்பார். முடியவில்லை. இது என்னமாதிரியான விவாதம்?

சசிகலாவின் தலைமையில் அதிமுகவின் வருங்காலம் எப்படி இருக்கும்?

அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நான் தலையிட முடியாது. மதிப்பிடவும் முடியாது.

உங்கள் அமைச்சரவை எப்படி இயங்குகிறது?

நாங்கள் கொள்கைகளை உருவாக்குகிறோம். சர்வதேச முதலீட்டாளர்களின் முதலீடு, வர்த்தகம் என்று இயங்குகிறோம். நேரடியாக மக்களை அணுகும் வாய்ப்பு எங்கள் அமைச்சரவைக்குக் குறைவுதான். ஆனாலும் ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள் என்று பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பெண்கள் சுகாதார மேம்பாட்டுக்கு துறை சார்ந்து என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியம் சிறப்பாகத் தன் பணியைச் செய்துவருகிறது. எனது துறைக்கு உட்பட்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில், எளிதில் மட்கக்கூடிய வகையில் நாப்கின்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கிறோம். காதி கிராமத் திட்டங்களையும் ஊக்குவிக்கிறோம்.

'மேக் இன் இந்தியா', 'ஸ்டேண்ட் அப் இந்தியா' என்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். அது சாமான்யர்களைச் சென்றடைந்துள்ளதா? அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன?

இதில் புள்ளிவிவரங்களைக் கூற முடியாது. வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் இன்னும் அதிகமாக முன்னேற வேண்டும். அதனால் எரிவாயுக் குழாய்கள் பதிப்பது, பாசனத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதனால் அவர்களுக்கு அளிக்கும் நிதியுதவியை ஏன் தமிழகத்துக்கு அளிக்கவில்லை என்று கேட்பது முறையாகாது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு அளிக்கும் நிதியுதவியை, குறிப்பிட்ட அளவு முன்னேறியுள்ள தமிழகத்தோடு ஒப்பிடக்கூடாது.

இத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள்?

தகவல்களைக் கேட்டீர்கள் என்றால் ஆமாம் என்பேன். ஆனால் பரந்துவிரிந்த இந்திய நாட்டில் எல்லாத் தகவல்களையும் அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாது. சமூக ஊடகங்கள் பல்வேறு விதமாக இருக்கின்றன. செய்தித்தாள்களில், சமூக ஊடகங்களில் தகவல்களை விளம்பரமாகக் கொடுக்கிறோம்.

என்னுடைய குறை என்னவென்றால் இந்தியில் இருந்தோ, ஆங்கிலத்தில் இருந்தோ அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் பிராந்திய மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும்போது அதன் தன்மை சிதைந்துவிடுகிறது. இந்நிலை மாறவேண்டும்.

இப்போதும் மோடி அலை இருக்கிறதா? பஞ்சாபில் மோடியை முன் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்யப்படுகிறதே?

முன்னிறுத்தினால் மோடியைத் தவிர யாரும் இல்லையா என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு மாநிலப் பிரச்சாரத்திலும் ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றுகிறோம். மாநிலத் தலைமையின் முடிவுக்கு ஏற்ப கட்சி, தன் பிரச்சார வடிவத்தை மாற்றிக்கொள்ளும். இது எல்லாக் கட்சிகளும் பின்பற்றுவதுதான்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்கர்களையே வேலைக்குச் சேர்த்துக்கொள்வோம் என்றார். இப்போது இந்தியா உண்மையான நண்பன் என்கிறார். இது என்ன மாதிரியான நிலைப்பாடு? அங்கிருக்கும் இந்தியர்களின் வருங்காலம் எப்படி இருக்கப் போகிறது?

எல்லோரையும் போல தேர்தலின்போது சொன்னதை அவரும் நிறைவேற்றுவார். ஒபாமா அரசின்போது இருந்த அதே நட்புறவில்தான் ட்ரம்ப் அரசுடனும் இருப்போம்.

அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலர் முக்கியமான தகவல்களைக்கூட சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்விட்டர் வழியேதான் சொல்கிறார்கள். இதை ட்விட்டரில் தொடர்ந்து இயங்கும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசின் செயல்பாடு அனைத்தையுமே அதில் சொல்வதில்லை. சமூக ஊடகம் வலிமையான சாதனம். இதில் தவறொன்றுமில்லை. ஒரு தகவல் உடனடியாக மக்களைப் போய்ச் சேரவேண்டுமென்றால் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அரசின் அனைத்துத் தகவல் பரிமாற்றமும் அதில்தான் நடக்கிறது என்றால் அப்படியில்லை.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவுகள் என்னவென்று நினைக்கிறீர்கள்? பல சிறு வர்த்தக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றனவே? இதனால் ஜிடிபி உள்ளிட்ட முக்கியக் காரணிகளில் விளைவுகள் எப்படியிருக்கும்?

டிசம்பர் 31-ம் தேதி மோடி பேசும்போது சிறு, குறு வணிகர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் என்ன செய்யவேண்டும் என்று அறிவித்தார். பட்ஜெட்டிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும். ஜிடிபி மாற்றத்தை உடனடியாகக் கூறிவிட முடியாது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேண்டுமானால் பாதிப்பும், சரிவும் ஏற்பட்டிருக்கலாம். முழு ஆண்டு ஜிடிபி மாற்றத்தை இதை வைத்து அளவிடமுடியாது. ஆனால் அதைச் சரிப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

நிர்மலா சீதாராமன், தன் தந்தையிடம் இருந்து ஒழுக்கத்தையும், தாயிடம் இருந்து வாசிப்பையும் கற்று, பின்பற்றுபவர். இவை இரண்டும் எந்தளவுக்கு உங்கள் வாழ்க்கையில் பயன்படுகிறது?

வாசிப்பை எப்போதும் பின்தொடர்ந்தே வந்திருக்கிறேன். ஆனால் இப்போது படிப்பதற்காக அதிக நேரத்தை ஒதுக்க முடியவில்லை. அரசியல் வாழ்க்கைக்கு ஒழுக்கம் அத்தியாவசியத் தேவையாகவே இருக்கிறது.

கணவரின் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் மிக்கது. அதிலிருந்து எப்படி பாஜகவில் இணைந்தீர்கள்? ஒரு பெண்ணாக அரசியலில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

புகுந்த வீட்டில் அனைவரும் காங்கிரஸ்காரர்கள். திருமணத்துக்கு முன்பே மாமனார் இறந்துவிட்டார். மாமியார் எனக்கு முழு ஆதரவு அளித்தார். பாஜகவில் இணைய அழைப்பு வந்தபோது அவர் எதுவும் சொல்லவில்லை. நாட்டுக்கு சேவை செய்ய உனக்கு அழைப்பு வந்திருக்கிறது செல் என்று சொன்னதே அவர்தான். தனிப்பட்ட முறையிலும், கொள்கைரீதியாகவும் எனக்கு பாஜகவின் மீது ஆர்வம் இருந்தது. இணைந்தேன்.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சி மீதான விமர்சனங்களைக் கொண்டு, உங்கள் அரசு என்ன மாதிரியான மாற்றங்களை முன்னெடுத்திருக்கிறது?

100 சதவீதம் வேறுபட்டுக் காண்பிக்கிறோம். ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆகப்போகிறது. ஊழல் பற்றி எங்கேயாவது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதா? அது நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பது கூட முக்கியமில்லை. ஊழல் குறித்தே பேச்சே காதில் விழவில்லை.

அடுத்ததாக நாங்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு வெளிப்படைத் தன்மை இருக்கிறது. யார் ஆலோசனை கூறினாலும் அதைக் கேட்கக்கூடிய அரசாக இருக்கிறோம். எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கட்சியைப் பார்க்காமல் மக்களைக் கவனித்து ஆட்சி நடத்துகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சில மாநிலங்களுக்கு மாற்றாந்தாய் அணுகுமுறைதான் இருந்தது. ஆனால் எங்கள் ஆட்சியில் அப்படிக்கிடையாது.

பெண் தொழில் முனைவோர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்த அரசு எந்த விதத்தில் தேவையோ அத்தனை வழிகளிலும் உதவத் தயாராக இருக்கிறது. நாட்டுக்கு பெண்களின் பங்களிப்பு சம விகிதத்தில் இருக்க வேண்டும்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

அதற்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கடைசி ரூபாய் வரை ஒழிக்க வேண்டும் என்றால் அனைத்து மக்களும் பொறுப்பெடுக்க வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்று சொன்னோம். அதை வீரியம் குறையாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பேட்டியின் வீடியோ பதிவு